Home » தென்சீனப் பிராந்திய பௌத்த மாநாடு கொழும்பில் நேற்று ஆரம்பம்

தென்சீனப் பிராந்திய பௌத்த மாநாடு கொழும்பில் நேற்று ஆரம்பம்

by mahesh
December 13, 2023 8:40 am 0 comment

தென் சீனக் கடல் பிராந்திய பௌத்த வட்டமேசை (2023) மாநாட்டின் கீழ் நடைபெறும் கொழும்பு மாநாடு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமானது. 32 நாடுகளின் பௌத்த சமய துறவிகள் மற்றும் ஏனைய பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், இந்த ஆண்டு இம்மாநாடு நடைபெறுகிறது. ‘நல்லிணக்கத்துடன் இணைந்து பட்டுப்பாதையின் ஊடான ஞானத்துடன் வெளிச்சம் பெறல்’ என்பதே மாநாட்டின் கருப்பொருளாகும். சீனாவின் மூத்த தேரர்களில் ஒருவரான வணக்கத்துக்குரிய, யின் ஷுன் தலைமையில் கொழும்பு மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கங்காராம விகாரை மேற்கொள் கிறது.

2023 ஆம் ஆண்டுக்கான தென்சீனக் கடல் பௌத்த ஷென்ஜன் வட்டமேசை மாநாடு கங்காராம விகாரையின் விகராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி கலபொட ஞானஸ்ஸார தேரர் தலைமையில், கங்காராம விகாரையின் பணிப்பாளர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் அழைப்பின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாடு டிசம்பர் 14 வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டுடன் சீன சத்திரசிகிச்சை நிபுணர்களால் 100 கண்புரை சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பௌத்த கல்வி தொடர்பான உப மன்றம் மற்றும் களனி பல்கலைக்கழகம் இணைந்து இளைஞர் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர கங்காராம விகாரையின் விகராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஞானஸ்ஸர தேரரின் 80 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறும் அன்னதான புண்ணிய நிகழ்வு, பெரஹரா மற்றும் உலக சமாதானத்தை வேண்டி நடைபெறும் ஆசிர்வாத பூஜையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோத்தபாய ராஜபக்ஷ, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன, பௌத்த, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ். தேவானந்தா, இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொங், சீன தேசிய சமய விவகாரங்கள் நிர்வாகத் தலைவர் சென் ரே போங், அமைச்சர்கள், இராஜதந்திர பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT