Friday, March 29, 2024
Home » முதலுதவி, ஆரம்ப சிகிச்சை முறைகளை சாதாரண மக்கள் அறிந்திருப்பது அவசியம்

முதலுதவி, ஆரம்ப சிகிச்சை முறைகளை சாதாரண மக்கள் அறிந்திருப்பது அவசியம்

விளையாட்டு ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்களுக்கு அக்கரைப்பற்றில் உடற்பயிற்சி சிச்சை பயிற்சி செயலமர்வு

by mahesh
December 13, 2023 10:10 am 0 comment

அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளில் கடமையாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கு பிடித்து விடுதல் மற்றும் உடற்பயிற்சி ஆகிய முறைகளில் உடற்பயிற்சி சிகிச்சை வழங்கும் முறை (Sports Physiotherapy & Injury) தொடர்பில் விளக்கமளிக்கும் ஒருநாள் பயிற்சி செயலமர்வு வெற்றிகரமாக நடைபெற்றது. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் (நழீமி) வழங்கிய ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல், ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத் ஆகியோர் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் கனிஷ்ட கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிரேஷ்ட உடற்பயிற்சி நிபுணர் கே.ஹரன்ராஜ் கலந்து கொண்டு விரிவான விளக்கமளித்தார். அத்துடன் அவசியமான விடயங்களில் செயன்முறைப் பயிற்சியும் வழங்கப்பட்டது. விளையாட்டின் போதும், விளையாட்டுப் பயிற்சியின் போதும் தற்காலத்தில் பலர் உடல் உபாதைக்குள்ளாகின்றமை தெரிந்ததே. அவர்களுக்கு ஆரம்பமாக முறையான முதலுதவி மற்றும் சிகிச்சை வழங்க வேண்டியது அவசியமாகவுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு இச்செயலமர்வு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.

“விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீர் சுகவீனமுற்றவர்கள், இறுதியில் ஆபத்தான விளைவுகளை எதிர்கொண்ட வரலாறு உள்ளது. இதற்கு முறையான முதலுதவி அல்லது சிகிச்சை வழங்கத் தெரியாததே அiடிப்படைக் காரணம் எனலாம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது.

முதலுதவி மற்றும் ஆரம்ப சிகிச்சை முறைகளை சமூகத்திலுள்ள சாதாரண மனிதர்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இதற்கான தேவை பல சந்தர்ப்பங்களில் நாம் வாழும் சூழலில் எழுகின்ற போதிலும், அதனைக் கண்டுகொள்ளாது, நாங்கள் மௌனியாக கடந்து செல்கின்றோம். ஆனால், அதன் இறுதி வடிவம் கவலையாக அல்லது ஆபத்தானதாக அமைந்து விடுகின்றது.

அவசியமான சந்தர்ப்பங்களில் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதனை பாடசாலைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடே இம்முயற்சியாகும். பாடசாலையில் பணியாற்றும் விளையாட்டு ஆசிரியர்களும், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களும் பெற்றுக் கொண்ட பயிற்சியை பாடசாலை மாணவர்களுக்கு ஊடாக சமூகத்திற்கு வழங்குவது எமது பிரதான இலக்காக உள்ளது. அது பாரியளவில் மாற்றம் அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த இலக்கை நிச்சயம் வெற்றி கொள்தற்கான நம்பிக்கையை சிரேஷ்ட உடற்பயிற்சி நிபுணர் கே.ஹரன்ராஜ் ஏற்படுத்தியுள்ளார். அவர் அவசியமான அனைத்து விடயங்களிலும் விளக்கமளித்துள்ளார். இவ்வாறான நிபுணர்களின் சேவை மனிதன் உயிர் வாழும் காலம்வரை தேவையாகும்” என அக்கரைப்பற்று கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல் நம்பிக்கை தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் கல்விக் கோட்டப் பாடசாலைகளிலுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 50 பேர் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு நன்மையடைந்தனர். பங்குபற்றுநர்களின் வினாக்கள், சந்தேகங்களுக்கு சிரேஷ்ட உடற்பயிற்சி நிபுணர் கே.ஹரன்ராஜ் தெளிவான முறையில் பதிலளித்தார்.

முகம்மட் றிஸான் (அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT