இயற்கை வளங்கள் மீதான கரிசனை | தினகரன்

இயற்கை வளங்கள் மீதான கரிசனை

காடுகளை  மீளுருவாக்கம் செய்வதில் எமது நாடு தற்போது முதன்முறையாக கவனம் செலுத்தத்  தொடங்கியுள்ளது. காடுகளை வளர்த்தெடுக்கும் நோக்குடன், மரங்களின் விதைகளை  வானத்தில் ​ஹெலிகொப்டரில் இருந்து தூவுகின்ற நடவடிக்கை தற்போது  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படையினர் இத்திட்டத்தை  முன்னெடுத்திருக்கின்றனர். காடு வளர்க்கும் திட்டம் நொச்சியாகமவில்  அண்மையில் விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.  

காடுகளை வளர்க்கும் திட்டம் மலேசியா உட்பட சில நாடுகளில்  நீண்ட காலமாகவே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்களின்  தேவைகளுக்காக காடுகள் எந்தளவு அழிக்கப்படுகின்றனவோ, அதே அளவிலான காடுகள்  புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  

அவ்வாறு காடுகள் புதிதாக உருவாக்கப்பட்டுக்  கொண்டிருக்குமானால் நாட்டில் காட்டு வளம் எக்காலத்திலும் சமநிலையாக  பேணப்பட்டுக் கொண்டிருக்கும். காடுகளின் பரப்பளவு குறையப் போவதில்லை,அதனால்  அந்நாட்டுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதுமில்லை.  

‘புவியின் நுரையீரல் காடுகள்’ என்பர். காடுகள் இருப்பதனாலேயே  புவியின் வளிமண்டலத்தில் ஒட்சிசனின் வீதம் சீராகப் பேணப்படுகின்றது.  வளிமண்டலத்தின் அசுத்த வாயுவான காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து  உயிரினங்களுக்குத் தேவையான ஒட்சிசனை வெளிவிடுகின்ற அருமையான பணியை மரங்களே  ஆற்றிக் கொண்டிருக்கின்றன.  

காடுகள் அழிக்கப்படுமானால் வளிமண்டலத்தில் ஒட்சிசன் வாயுவின்  வீதம் குறைவடைவதுடன் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிக்கும். இதனால்  வளிமண்டலத்தில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமன்றி, புவி  வெப்பமடையும் ஆபத்தும் ஏற்படுகின்றது.  

புவி வெப்பமடைவதன் காரணமாக உருவாகியுள்ள காலநிலை மாற்றங்களின்  தாக்கங்கள் தொடர்பாக இங்கு விபரிக்க வேண்டிய அவசியம் கிடையாது. உலகெங்கும்  இன்று ஏற்பட்டுள்ள வெள்ளம், வரட்சி, துருவங்களில் பனிக்கட்டி உருகுதல்  போன்றவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணமே புவி வெப்பமடைதல் என்பது தெரிந்த  விடயம்.  

இலங்கையிலும் காடுகள் மிக வேகமாக அழிக்கப்பட்டுக் கொண்டு  வருகின்றன. கடந்த அரை நூற்றாண்டு காலப் பகுதியை எடுத்துக் கொள்வோமானால்  எமது நாட்டின் காடுகளில் சுமார் அரைப்பங்கு அழிக்கப்பட்டு விட்டது எனலாம்.  

விவசாய நிலங்களை ஏற்படுத்திக் கொள்ளல், குடிமனைகளை அமைத்தல்,  மரக் கடத்தல், விறகுத் தேவை போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக பெருமளவு  காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்கு  எத்தனையோ திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும், அதனைத்  தடுத்து நிறுத்தவே முடியாதிருக்கின்றது.  

மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும், சேனைப் பயிர் நிலங்களை  ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் காடுகளைத் தீவைத்து அழிக்கும் விஷமத்தனமான  காரியத்திலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  

காடுகள் என்பது எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள இயற்கை வளம்  ஆகும். அவை சூழலுக்கு அழகைத் தருகின்றன, சூழலுக்கு குளிர்ச்சியைத்  தருகின்றன, நிழலைத் தருகின்றன,கனிகள், கிழங்குகள், கீரைகள்  போன்றவற்றையெல்லாம் எமக்கு அளிக்கின்றன. அரியவகை பிராணிகளின் வாழிடங்களாக  காடுகள் திகழ்கின்றன.  

நாட்டில் மழை பெய்வதற்கு காடுகள் உதவி புரிகின்றன. எமது  நாட்டின் பிரதான நதிகளின் ஊற்றுகள் மலையகத்திலேயே ஆரம்பமாகின்றன.  மலையகத்தில் காடுகள் பேணப்பட்டாலேயே நீருற்றுகளையும் பேண முடியும். ஆனால்  மலைநாட்டில் காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டு வருவதனால் அங்கு நீரூற்றுகள்  குறைவடைந்துகொண்டு வருவதாக சமீப காலமாக சூழலியலாளர்கள் எச்சரிக்கை செய்து  கொண்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.  

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, காடுகளை மனிதன் வேகமாக அழித்துக்  கொண்டு வருவதனால் யானைகளின் வாழிடம் கேள்விக்குறியாகியுள்ளது. யானைகள்  இருப்பிடம் இழந்த நிலையில், உணவு தேடி இப்போதெல்லாம் குடிமனைப்  பகுதிகளுக்குள் பிரவேசிப்பது வழக்கமாகி விட்டது. யானைகளால் மக்களுக்கு  ஏற்படுகின்ற உயிர், உடைமை இழப்புகள் குறித்து ஊடகங்களில் தினமும் செய்திகள்  வெளிவருகின்றன.  

நாட்டின் வடக்கு, கிழக்கில் முன்னொரு காலத்தில் அதிகளவு  காடுகள் காணப்பட்டன. ஆனால் யுத்த காலத்தின் போது அங்கு பெருமளவு காடுகள்  அழிக்கப்பட்டு விட்டன. பாதுகாப்புப் படையினர் பெருமளவு பனைமரங்களையும்  காடுகளையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அழித்திருந்தனர். விடுதலைப்  புலிகள் பதுங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொண்டு வந்த காரணத்தால்,  வீதியோரங்களில் அமைந்திருந்த பெருமளவு காடுகள் இராணுவத்தினரால்  அழிக்கப்பட்டன.  

வன்னியில் முன்னொரு காலத்தில் அடர்த்தியாகக் காணப்பட்ட  காடுகள் இப்போது அங்கு இல்லை. இவையெல்லாம் இயற்கை வளங்களின் அழிப்பு ஆகும். காடுகள் இவ்வாறாக வேகமாக அழிக்கப்பட்டதே தவிர, காடுகளை புதிதாக  உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் எவருக்குமே ஏற்படவில்லை. இவ்வாறான நிலையில் காடுகளை மீளுருவாக்கும் திட்டத்தில் இலங்கை விமானப் படையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இயற்கை வளத்தைப் பாதுகக்கும் இம்முயற்சி உண்மையிலேயே  பாராட்டப்பட வேண்டியதாகும்.


Add new comment

Or log in with...