Friday, March 29, 2024
Home » பேராசிரியர் யோகராசாவின் கலை இலக்கிய, சமூகப் பணிகளுக்கு பலதரப்பினரும் புகழாரம்

பேராசிரியர் யோகராசாவின் கலை இலக்கிய, சமூகப் பணிகளுக்கு பலதரப்பினரும் புகழாரம்

இறுதி அஞ்சலியில் மக்கள் வெள்ளம்!

by mahesh
December 13, 2023 3:08 pm 0 comment

கிழக்குப் கல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் செல்லையா யோகராசாவின் பூதவுடலுக்கான இறுதி அஞ்சலி கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற போது, அன்னாரின் இலக்கிய மற்றும் சமூகப் பணிகள் குறித்து அவரது நண்பர்கள், அன்பர்கள், அபிமானிகள், இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.

மட்டக்களப்பில் பெருந்திரளான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கள்ளியன்காடு மின்தகன மையானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை மரணமடைந்த பேராசிரியர் செல்லையா யோகராசாவின் பூதவுடல் மட்டக்களப்பிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த போது நாட்டின் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட பல பாகங்களில் இருந்தும் வருகை தந்திருந்த பெருமளவிளான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இவருக்கான இறுதி மரியாதை அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை அவரது இல்லத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன் போது கலை இலக்கியவாதிகள், கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினர்.

பேராசிரியர் செல்லையா யோகராசாவின் எழுத்துப்பணி, அவரது இலக்கியப் பங்களிப்பு, பல்கலைக்கழகத்துக்கு அவர் ஆற்றிய சேவைகள் என பல விடயங்கள் பலராலும் இதன் போது நினைவு கூரப்பட்டதுடன் வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பகுதிகளில் அவர் கற்பித்த மாணவர்களின் உரைகளும் இடம்பெற்றன. பேராசிரியர் யோகராசா யாழ்ப்பாணம், வடமராட்சி, கரணவாய் தெற்கு, கரவெட்டியை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு பெயிலி முதலாம் குறுக்கு வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

பேராசிரியர் யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையகத்தில் திருமணம் செய்து மட்டக்களப்பில் மிக நீண்ட காலம் வசித்தவர்.

இவர் தமிழ் பாரம்பரிய கோட்பாடுகளுக்கு அமைய வாழ்ந்ததுடன் பன்மைத்துவ சமூக இலக்கிய கலாசாரத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளார். இன ஒற்றுமையை கட்டி வளர்ப்பதில் மிகவும் பாடுபட்டவர். இவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பலரும் உயர்ந்த துறைசார்ந்தவர்களாக இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

எம். எஸ். எம். நூர்தீன் (புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT