ஐக்கியத்துக்கான பாதை முதலில் திறக்கட்டும்! | தினகரன்

ஐக்கியத்துக்கான பாதை முதலில் திறக்கட்டும்!

புதிய ஆண்டில் காலடியெடுத்து வைத்திருக்கின்றது உலகம். அனைத்து நாடுகளிலுமே துன்பங்களும் நெருக்கடிகளும் நிலவுகின்ற போதிலும், புத்தாண்டு பிறக்கின்ற வேளையில் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எதிர்கால நம்பிக்கைகள் துளிர் விடுவது வழமை.

பிறந்திருக்கும் புதிய ஆண்டில் தங்களது நீண்ட கால எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறி, சுபிட்சம் நிலவுமென்றே ஒவ்வொருவர் மனதிலும் நம்பிக்கை பிறக்கின்றது. இன்றைய புதுவருடமும் அதுபோலவே நம்பிக்கைகளுடன் பிறந்திருக்கின்றது.

உலகம் இன்று பல்வேறு துன்பங்களுக்குள் கட்டுண்டு போய்க் கிடக்கின்றது. நெருக்கடிகள் இல்லாத நாடு உலகில் இன்றில்லை. ஒவ்வொரு நாட்டிலும் மக்களை ஏதோவொரு துன்பம் ஆட்டுவித்துக் கொண்டேயிருக்கின்றது. உயிரிழப்புகளும் உடைமை அழிவுகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. பல்வேறு நாடுகளிலும் மனிதப் பேரவலங்கள் முடிவின்றித் தொடருகின்றன.

அரசியலும் பயங்கரவாதமுமே உலக நாடுகளின் துன்பங்களுக்கான பிரதான காரணிகள்! மக்கள் மத்தியில் வறுமை, மனித உயிரிழப்புகள், அகதி வாழ்வு அநீதிச் செயற்பாடுகள் போன்ற அத்தனை துயரங்களுக்கும் அடிப்படைக் காரணிகள் சுயநல அரசியலும், பயங்கரவாதமுமே ஆகும்.

உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளின் விளைவாகவும் சர்வதேச நாடுகளுக்கிடையிலான போட்டா போட்டிகளாலும் உலகின் அனைத்து நாடுகளுமே இன்று அமைதியை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன.

உலக நாடுகளில் தலைவிரித்தாடுகின்ற இவ்வாறான நெருக்கடிகளின் மத்தியிலேயே 2019ம் ஆண்டுக்குள் உலகம் இன்று காலடியெடுத்து வைத்திருக்கின்றது.

சர்வதேச ரீதியில் நோக்குகின்ற வேளையில், இலங்கையில் பன்னெடும் காலமாக நிலவி வருகின்ற உள்நாட்டு நெருக்கடியும் பிரதானமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகின்றது.

உள்நாட்டு அரசியல் முரண்பாடுகள் காரணமாக அபிவிருத்தி இலக்கை அடைய முடியாத ஒரு தேசமாகவும், சிறுபான்மையின மக்களின் அரசியல் அபிலாஷைகளை இன்னுமே தீர்த்துக் கொள்ள முடியாமல் இனமுரண்பாடுகளின் விளைவாக பாதிக்கப்பட்டதொரு நாடாகவும் இலங்கை விளங்குகின்றது. சர்வதேசம் இன்றும் கூட இலங்கையை சந்தேகக் கண்கொண்டே நோக்குகின்றது.

முப்பது வருட கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினை நெருக்கடிக்குத் தீர்வைக் கண்டு விட்டதாக எவரேனும் கருதுவார்களாக இருந்தால் அதனை முட்டாள்தனமென்றே கொள்ள வேண்டும். அவ்வாறான கூற்று உள்நாட்டையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கான வார்த்தையே ஆகும்.

ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டின் தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டுவிட்டதாகக் கூறுகின்ற போலித்தனமான சமாதானங்களையெல்லாம் உலகம் ஒருபோதுமே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் வடக்கு- கிழக்கு மண்ணில் தற்போது நிலவுகின்ற அமைதியானது உண்மையிலேயே சுமுகமானதல்ல. தமிழ் மக்களின் உள்ளங்களில் அரசியல் உரிமைக்கான வேட்கை இன்னும் அணையாமல் கனன்று கொண்டேயிருக்கின்றது. அரசியல் உரிமை கோருகின்ற போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களது உள்ளத்தில் அரசியல் விடுதலைக்கான தாகம் என்றுமே தீராமல் இருக்குமென்பதே உண்மை.

அதேசமயம், இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரமானது முன்னரைப் பார்க்கிலும் தற்போது கூடுதலாக சர்வதேசமயப்பட்டுப் போயுள்ளது என்ற யதார்த்தத்தையும் ஒப்புக் கொள்ளாமலிருக்க முடியாது.

புத்தாண்டு பிறந்திருக்கின்ற இன்றைய வேளையில், இலங்கையர்களாகிய நாம் எமது நாட்டில் நீண்ட காலமாகத் தொடருகின்ற நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் குறித்து ஆராய வேண்டியதே முதலில் அவசியமாகின்றது. தாய்நாட்டை நேசிக்கின்ற மக்களின் இன்றைய உண்மையான எதிர்பார்ப்பும் அதுவாகவே இருக்க வேண்டும்.

வடக்கு-, கிழக்கு மக்களின் அரசியல் தீர்வு ஒருபுறம் இருக்கட்டும்... நாட்டின் தேசிய அரசியல் இன்று விமர்சனத்துக்கு உள்ளாகி நிற்கின்றது. இலங்கையின் அரசியல் கலாசாரம் மோசமான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவே பலரும் ஆதங்கப்படுகின்றனர். கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் நாட்டின் அரசியல் களத்தில் நிலவிய நெருக்கடிகளைப் பார்க்கின்ற போது, இலங்கையின் அரசியல் கலாசாரத்தை எவ்வாறு நாம் பாராட்ட முடியும்?

முதலில் இலங்கையின் அரசியல் தூய்மைப்படுதல் வேண்டும். அரசியல் சுயநலன்கள் அகன்று, மக்களின் நலன் குறித்த சிந்தனைகள் அரசியல்வாதிகளின் உள்ளங்களில் வலுவடைய வேண்டும். அதன் பின்னரே மக்களின் உள்ளங்களில் நேர்மையான சிந்தனைகள் வலுப்பெறும். ஏனெனில் அரசியல்வாதிகளாலேயே மக்கள் ஆட்டுவிக்கப்படுகின்றார்கள். இவற்றையெல்லாம் புறந்தள்ளியபடி வெறுமனே புத்தாண்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதனால் ஆகிவிடப் போவது எதுவுமில்லை.

2019ம் வருடமானது இலங்கையைப் பொறுத்தவரை அரசியல் முக்கியத்துவம் மிகுந்த ஆண்டாக அமையுமென அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது தேர்தல்கள், அரசியல் நெருக்கடிகள் நிறைந்த ஆண்டாகவே 2019ம் வருடம் அமையுமென்கின்றனர் அவர்கள்.

கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் உருவெடுத்த அரசியல் நெருக்கடியானது தற்போது ஓரளவு தணிந்துள்ள போதிலும், இன்றைய அரசியல் அமைதியை நிரந்தரமானதெனக் கொள்ள முடியாது. அரசியல் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள் மீண்டும் உருவெடுப்பது ஒருபுறமிருக்க, அரசியல் ஸ்திரமின்மை காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கான ஆபத்தும் எதிர்நோக்கப்படுகின்றது.

தென்னிலங்கையின் அரசியல் நிலைவரம் இவ்வாறிக்கையில், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் வடக்குகிழக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையே இன்னுமே எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படாதிருக்கின்றது. அதே சமயம் வடக்கு, கிழக்குக்கு நீதியான அரசியல் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசியல் யாப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் ஸ்தம்பிதமடைந்து போய் நிற்கின்றன. தேசிய அரசியலில் நெருக்கடி நிலவுகையில், வடக்கு கிழக்கு அரசியல் தீர்வு குறித்து எவருமே அக்கறை கொள்வதாக இல்லை.

பிறந்திருக்கும் புத்தாண்டில் மக்களின் உள்ளங்களில் இனஐக்கியத்துக்கான வித்துகள் நடப்படுதல் வேண்டும். இனங்கள் மத்தியில் ஐக்கியம் நிலைநிறுத்தப்பட்டாலேயே சிறப்பான தேசமொன்றைக் கட்டியெழுப்ப வழி பிறக்கும். இனஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளையே சார்ந்தது. ஐக்கியத்துக்கான பாதை முதலில் திறக்கட்டுமென இன்றைய புத்தாண்டில் நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம்!


Add new comment

Or log in with...