Friday, March 29, 2024
Home » பூநகரியில் சூரிய மின்சக்தி கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

பூநகரியில் சூரிய மின்சக்தி கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 21முடிவுகள்

by Prashahini
December 12, 2023 1:02 pm 0 comment

கொரிய – இலங்கை நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம்
– தடுப்புக் காவலுக்கு மாற்றீடாக வீட்டுக் காவல்

பூநகரி குளத்தின் மேற்பரப்பில் நிறுவப்படவுள்ள 700 மெஹாவோற் சூரிய மின்சக்தி கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 21 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பூநகரி குளத்திலிருந்து புதிய கிளிநொச்சி உப மின் நிலையம் வரை தேவையான மின்கடத்திக் கட்டமைப்பை நிர்மாணித்தல் உள்ளிட்ட 100%மின்கல வலுசக்தி காப்புக் கட்டமைப்புடனான 700 மெகாவொட் சூரிய மின்சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக யுனைற்றட் சோலர் எனர்ஜி கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்வதற்கும், கருத்திட்ட முன்மொழிவு மதிப்பீடு மற்றும் வலுசக்தியை கொள்வனவு செய்யும் கட்டணத்தை தீர்மானிப்பதற்காக அமைச்சரவைக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவை நியமிப்பதற்கும் 2023-09-11 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விதந்துரைகளின் அடிப்படையில் யுனைற்றட் சோலர் எனர்ஜி கம்பனியுடன் உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துதல் மற்றும் அதற்குரிய மின்சாரத்தை கொள்வனவு செய்யும் உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

2. தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் பணிகளை மேலும் பயனுறு வகையிலும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்காக மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகாரத்தை ஒப்படைத்தல்

1996 ஆம் ஆண்டில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சின் கீழ் நிவாரணப் பணிகள், புனர்வாழ்வுப் பணிகள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தாபிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் 2007.01.01 தொடக்கம் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையமெனப் பெயரிடப்பட்டு அரச நிறுவனமாக இதுவரை இயங்கி வருகின்றது. இந்நிலையத்தின் பணிகளை மேலும் பயனுறு வகையிலும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்காக மாவட்டச் செயலாளர்களுக்கு/அரசாங்க அதிபர்மாருக்குத் தேவையான அதிகாரத்தை ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. குற்றங்களின் போதான பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்கள் தொடர்பாக கொரிய குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளல்

குற்றங்களின் போதான பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்கள் தொடர்பாக கொரிய குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அலுவலர்களுடன் கூடிய பிரதிநிதிகள் குழு மற்றும் கொரிய குடியரசின் குறித்த நிறுவனப் பிரதிகளுடன் இணைந்து ஒப்பந்த வரைபொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் இரண்டு நாடுகளிலும் குற்றங்களைத் தடுத்தல், விசாரணை செய்தல், முறைப்பாடுகளை செய்தல் மற்றும் குற்றத் தடுப்புக்களில் வினைத்திறனை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த ஒப்பந்தம், இருதரப்பினர்களுக்கிடையே கையொப்பமிடுவதற்கும், பின்னர் இருநாடுகளின் இராஜதந்திர தூதுக்குழுக்கள் மூலம் ஏற்று அங்கீகரிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களை மையமாகக் கொண்டு சமுதாய மட்ட சுற்றுலா அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

கொரியக் குடியரசின் 2.172 பில்லியன் வொன் நிதியனுசரணையுடன் இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களை மையமாகக் கொண்டு சமுதாய மட்ட சுற்றுலா அபிவிருத்திக்கான முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கொரியாவின் சுற்றுலா நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இடையிலான உடன்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக 2023.01.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கொரியாவின் சுற்றுலா நிறுவனத்தின் பிரதிநிதிகள் குறித்த மாகாணங்களுக்கு விஜயம் செய்த பின்னர் முன்னோடிக் கருத்திட்டத்திற்குப் பதிலாக திட்டமிட்டவாறு ஒட்டுமொத்த கருத்திட்டத்தையும் ஒரேதடவையில் ஆரம்பிப்பதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் இருதரப்பினருக்கும் இடையில் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றி சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் சமர்ப்பித்துள்ள விடயங்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டு, அதற்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

5. மனித உரிமைகள் தொடர்பான அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தர குழுவொன்றை அமைத்தல்

மனித உரிமைகள் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பாக தொடராய்வு மற்றும் அறிக்கையிடலின் போது பயனுள்ள உள்ளக செயன்முறைக்காக தேசிய ரீதியான நிரந்தர சட்டகமாக செயலாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் மனித உரிமைகள் தொடர்பாக அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தர குழுவொன்றை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளிவிவகார அமைச்சின் ஒருங்கிணைப்பு/தலைமைதாங்கும் நிறுவனமாக செயலாற்றி மனித உரிமைகள் தொடர்பான அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தர குழுவொன்றை அமைப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக துரித தீர்மானங்களை மேற்கொள்கின்ற பொறிமுறையை நிறுவுதல்

2030 ஆம் ஆண்டாகும் போது தேசிய ரீதியில் நிச்சயிக்கப்பட்டுள்ள ஒத்துழைப்பு இலக்குகளை அடைவதற்காக மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திக் கருத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது காணப்படுகின்ற பொறிமுறையைக் கடைப்பிடித்து அவ்வாறான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கின்ற காலம் மற்றும் குறித்த பொறிமுறைக்கமைய செயலாற்றும் போது ஆர்வங் காட்டுகின்ற முதலீட்டாளர்கள் முகங்கொடுக்கின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, மீள்புதிப்பபிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டங்களைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்காக புதிய பொறிமுறையொன்று அறிமுப்படுத்தப்பட வேண்டுமென 2023.11.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திக் கருத்திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், அத்துடன் அந்நிறுவனங்கள் குறித்த தீர்மானங்களை வினைத்திறனுடனும் விரைவாகவும் செயலாற்றுகின்றமையைக் கண்காணிக்கக் கூடிய வகையில் கீழ்க்காணும் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த நிரந்தரக் குழுவொன்றை நியமிப்பதற்காக மின்சக்தி, வலுசக்தி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி செயலகம் (குழுத் தலைவர்)
பிரதமர் அலுவலகம்
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சு
சுற்றாடல் அமைச்சு
சுற்றுலா மற்றும் காணி அமைச்சு
கைத்தொழில் அமைச்சு
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு
நீர்ப்பாசன அமைச்சு
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு
இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை
இலங்கை மின்சார சபை

7. இலங்கைக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி மூலமாக விண்ணப்பிப்பதற்காக அதிகாரமளிக்கப்பட்ட முகவர் ஒருவரை நியமித்தல்

இலங்கைக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி மூலமாக விண்ணப்பிப்பதற்காக அதிகாரமளிக்கப்பட்ட முகவராகக் கடமையாற்றுவதற்கு GBS Technology Services & IVS Global – FZCO kw;Wk; VFS VF Worldwide Holdings Ltd இனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவை மதிப்பீடு செய்வதற்காக மதிப்பீட்டு குழுவொன்று 2023.09.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சட்டமா அதிபர் அவர்களின் அவதானிப்புக்களுக்கமைய வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. றங்கல பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்குக் காணித்துண்டொன்றை இலங்கை பொலிஸாருக்கு கையகப்படுத்தல்

தற்போது கெட்டகஹவெல பெருந்தோட்ட கம்பனிக்குச் சொந்தமான கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வருகின்ற றங்கல பொலிஸ் நிலையத்தில் இடவசதிகள் போதியளவு இன்மையால் கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு முறையாகத் தமது கடமைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன. அதனால் றங்கல பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்காக உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான டக்சாரி தோட்டத்தில் 02 ஏக்கர் காணித்துண்டொன்றை இலங்கைப் பொலிசுக்கு கையகப்படுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. புகையிரத சேவையின் வினைத்திறனை அதிகரிக்கும் கருத்திட்டத்தின் கீழ் இரத்மலான டீசல் இயந்திரவலு தொழிற்பேட்டையை திட்டமிடல் செய்து நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியனுசரணை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் புகையிரத சேவையை வினைத்திறனை அதிகரிக்கும் கருத்திட்டத்தின் கீழ் இரத்மலான டீசல் இயந்திரவலு தொழிற்பேட்டையை திட்டமிடல் செய்து நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, 09 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், 02 விலைமுறிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஏனைய 07 விலைமுறிகளை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய விபரங்களுடன் பதிலளிக்கப்பட்டுள்ள குறைந்த விலைமுறியைச் சமர்ப்பித்துள்ள சைனா சிவில் இன்ஜினியரிங்க் கன்ட்ரக்ஷன் கம்பனிக்குக் குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இலங்கை போக்குவரத்துச் சபைக்குத் தேவையான எண்ணெய் மற்றும் உராய்வு எண்ணெய் கொள்வனவுக்கான பெறுகைக் கோரல்

இலங்கை போக்குவரத்துச் சபைக்குத் தேவையான எண்ணெய் மற்றும் உராய்வு எண்ணெய் கொள்வனவுக்கான பெறுகைக் கோரலுக்கான தேசிய விலைமுறி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழு ஒவ்வொரு வகையின் அடிப்படையில் Lanka IOC PLC இற்கும் மற்றும்; Chevron Lubricant Lanka PLC இற்கும் எண்ணெய் மற்றும் உராய்வு எண்ணெயை கொள்வனவு செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கம்பனிகள் இரண்டுக்கும் ஏற்புடைய பெறுகைகளை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. காலணித்துவ இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் 108 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எட்வெட் ஹென்றி பேதிரிஸ் அவர்களின் படுகொலை தொடர்பான விசாரணை

இலங்கையில் காலணித்துவ ஆட்சியின் கீழ் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள், கலவரங்கள் மற்றும் அரசுக்கு எதிராக துரோகமிழைத்ததெனத் தெரிவித்து இராணுவ நீதிமன்றத்தால் குற்றஞ்சுமத்தப்பட்டு, குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டு, 27 வயதான எட்வெட் ஹென்றி பேதிரிஸ் அவர்கள் 1915.07.07 அன்று எவ்வித மேன்முறையீடுகளும் பெறப்படாமல் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த எட்வெட் ஹென்றி பேதிரிஸ் அவர்களின் பூதவுடல், இராணுவச் சட்டத்தின் கீழ் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் இறுதிக்கிரியைகளுக்கான நடபடிமுறைகளுக்கமைய, வெளிப்படுத்தாத வளாகமொன்றில் தகனம் செய்யப்பட்டுள்ளது. அவருடைய கொலை அப்போது எமது நாட்டை ஆட்சி செய்த உயர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் விளைவு எனப் பின்னர் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த படுகொலை தொடர்பான உண்மையான தகவல்களைக் கண்டறிந்து அவருக்கு நீதி வழங்குவதற்காக குறித்த விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன அவர்களின் தலைமையிலான மூவர் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. 1937 ஆண்டின் 2 ஆம் இலக்க தாவர, விலங்கினப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் VIII ஆவது உப அட்டவணையை திருத்தம் செய்தல்

2022 ஆண்டின் 7 ஆம் இலக்க தாவர, விலங்கினப் பாதுகாப்பு (திருத்த) சட்டத்தின் மூலம் இறுதியாக திருத்தம் செய்யப்பட்ட 1937 ஆண்டின் 2 ஆம் இலக்க தாவர, விலங்கினப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் VIII ஆவது உப அட்டவணையின் கீழான தாவர வகைப்படுத்தல் முறைமைக்கு அமைய 121 தாவர இனங்களுக்குரிய 680 இற்கும் அதிகமான தாவரங்கள் பாதுகாக்கப்பட்ட தாவரங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. ஆயினும், சமகாலத் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் அவ்வட்டவணையை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய தாவர வகைப்படுத்தல் மற்றும் பெயரிடுதல், சூழலியல், வனசீவராசிகள் பாதுகாப்பு மற்றும் மானிட தாவரவியல் போன்ற விடயப்பரப்புகளில் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை நியமிப்பதற்கும், அந்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் VIIIஆவது அட்டவணையைத் திருத்தம் செய்வதற்கும் வன ஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

13. பிரிவிடல் வழக்கு சட்டத்தை திருத்தம் செய்தல்

பிரிவிடல் வழக்குகளை துரிதமாக முடிவுறுத்துவதற்காக பிரிவிடல் வழக்கு சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை அடையாளம் காண்பதற்காக 2023-09-25 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. தடுப்புக் காவலில் வைப்பதற்கு மாற்றுத் தீர்வாக வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளை அறிமுகம் செய்தல்

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவுகின்ற நெரிசல் நீண்டகால பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினைக்குத் தீர்வாக தடுப்பு காவலில் வைப்பதற்கு / சிறைச்சாலையில் வைப்பதற்கு மாற்றுத் தீர்வாக உரிய வழக்கு நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்கள் மற்றும் தவறாளர்களை வீட்டுக் காவலில் தடுத்து வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் பொருத்தமான சட்டங்களை அறிமுகம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. 2007 ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளைகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்தல்

சீனி இறக்குமதியின் போது நடைமுறையிலிருந்த ஒரு கிலோகிராமுக்கு 25 சதமான விசேட வியாபாரப் பண்ட வரியை ஒரு கிலோகிராமுக்கு ரூபா 50/- வரை அதிகரிப்பதற்காக 2023-10-30 திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நடைமுறைப்படுத்துவதற்காக 2007 ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 2023-11-01 திகதிய 2356/20 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. காணி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் வழங்கல்; பத்திரங்களை பெற்றவர்களுக்கு காணிகளின் முழுமையான உரித்தை வழங்கும் “உருமய நிகழ்ச்சித்திட்டம்”

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதிப் பத்திரம் மற்றும் வழங்கல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்களுக்கு தாம் அனுபவித்துவரும் அல்லது அபிவிருத்தி செய்த காணிகளுக்கான முழுமையான உரித்து இன்மையால், குறித்த நிலத்தை சிறந்த முறையிலும், அபிவிருத்தி தேவைகளுக்கும் பயன்படுத்தும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, குறித்த பிரச்சினைகளை குறைப்பதற்காக அவ்வாறான காணிகளின் முழுமையான உரித்தை விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்களுக்கு வழங்குதல் மற்றும் 2024 ஆண்டின் ஆரம்பத்தில் குறித்த செயற்திட்டத்தை ஆரம்பித்து சில ஆண்டுகளில் முழுமையாக நிறைவு செய்யக்கூடிய வகையில் ‘உருமய நிகழ்ச்சித்திட்டம்;’ எனும் பெயரிலான நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 2024 வரவுசெலவுத் திட்ட உரையில் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டது.

குறித்த நிகழ்ச்சித்திட்டம் மூன்று கட்டங்களாக அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்மூலம் இருபது இலட்சம் குடும்பங்களுக்கு வதிவிட மற்றும் விவசாய நிலங்களின் முழுமையான உரித்து வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய, குறித்த வழிமுறைகளைப் பின்பற்றி காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதிப் பத்திரம் மற்றும் வழங்கல் பத்திரம் வழங்கப்பட்டுள்ள காணித் துண்டுகளுக்கு அரச காணி கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் முழுமையான உரித்துடனான வழங்கல் பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. .

17. யாழ்ப்பாணத்திலுள்ள சிறிய தீவுகளில் இரட்டைரக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புகளை நிர்மாணித்தல்

யாழ்ப்பாண தீபகற்பத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் குடியிருப்போருக்கு மின்சாரம் வழங்குவதற்காக 11 மில்லியன் அமெரிக்க டொலர் பங்காள நிதியனுசரணையை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கமைய குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இந்திய ஒப்பந்ததாரர்களிடமிருந்து மட்டும் விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தை U-Solar Clean Energy Solutions (Pvt) Ltd கம்பனிக்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. .

18. 2002 ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிக்கான திருத்தம்

2024-01-01 திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் வகையில் பெறுமதி சேர் வரிக்காக பதிவு செய்யும் வரையறையை ஆண்டில் வரி அறிவிடக்கூடிய வழங்கல்களின் ஒட்டுமொத்த பெறுமதியை 80 மில்லியனிலிருந்து 60 மில்லியன் வரை குறைப்பதற்காகவும், பெறுமதி சேர் வரி விகிதத்தை 15 % – 18% வரை அதிகரிப்பதற்குமான ஏற்பாடுகளை விதித்து 2002 ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2023-10-30 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்ட வரைஞரால் குறித்த திருத்தத்தை உள்ளடக்கி திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த திருத்தச் சட்டமூலத்தை அரசின் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. தம்மாம் விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனியின் விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்

வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனியின் விமானங்களுக்கு தம்மாம் விமான நிலையத்தில் விமான எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தம் 2023-12-31 திகதி முடிவடையவுள்ளது. தற்போது அங்கே உள்ள ஒரேயொரு விமான எரிபொருள் வழங்குநரான Modern Consortium for Refueling Aircraft Co. Ltd. (MCRA) கம்பனியிடம் மட்டும் விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்காக, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகை குழுவின் விதந்துரைகளுக்கு அமைய குறித்த ஒப்பந்தத்தை நேரடி ஒப்பந்தமாக வழங்குவதற்கு துறைமுகங்கள், கப்பல்த்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. 09 விமான நிலையங்களில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனிக்கு விமான எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தை வழங்குதல்

வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனிக்கு பாங்கொக், பீஜிங், டுபாய், ஹைதராபாத், கராச்சி, மாலே மற்றும் ரியாத் ஆகிய விமான நிலையங்களில் விமான எரிபொருள் வழங்கல் ஒப்பந்தம் 2024-02-29 ஆம் திகதியிலும், கோலாலம்பூர் மற்றும் ஜகார்த்தா ஆகிய விமான நிலையங்களில் விமான எரிபொருள் வழங்கல் ஒப்பந்தம் 2024-03-31 திகதியிலும் முடிவடையவுள்ளது. அந்த விமான நிலையங்களில் எரிபொருள் வழங்குவதற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. 11 விமான எரிபொருள் வழங்கல் கம்பனிகள் விலைமனுக்களை சமர்ப்பித்துள்ளன. கராச்சி விமான நிலையத்துக்கு ஒரு விலைமனுவும், ஏனைய 8 விமான நிலையங்களுக்கு 02 அல்லது அதற்கு கூடுதலான விலைமனுக்களும் கிடைத்துள்ளன.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கு அமைய விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை குறைந்தபட்ச விலைமனுக்களை சமர்ப்பித்துள்ள விலைமனுதாரர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதற்கு துறைமுகங்கள், கப்பல்த்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. 2017 ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலவாணிச் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழ் புதிய உத்தரவுகளை வெளியிடுதல்

சில மூலதன கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிதிசார் நிலையுறுதி அனுப்புதொகைகள் 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலாகும் வகையில் தற்காலிகமாக நிறுத்துதல் / மட்டுப்படுத்தும் வகையில் 2017 ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலவாணி சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழான கட்டளைகளை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பின்னர், குறித்த கட்டளைகளின் செல்லுபடியாகும் காலப்பகுதி பல தடவைகள் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமகால கட்டளைகளின் செல்லுபடியாகும் காலம் 2023-12-27 திகதியுடன் முடிவடையவுள்ளது. தசமகால கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுத்துதல் / மட்டுப்படுத்தல் பேணி அனுப்புதொகை முதலீட்டு கணக்குகள் ஊடாக சேவையில் ஈடுபடுவோரின் பங்குகளுக்கு உரித்தான திட்டங்கள் அல்லது சேவையில் ஈடுபடுவோரின் பங்குகள் விருப்பத்துக்குரிய திட்டங்களில் முதலீடு செய்வதற்காக தனியான வதிவிட நபர்களுக்காக இருந்த கைவிடுதலை நீக்குவதற்கும், 2023-12-28 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் மேலும் 06 மாத காலப்பகுதிக்கு புதிய கட்டளைகளை வெளியிடுவதற்கும், அவ்வாறு வெளியிடப்படும் கட்டளைகளுக்கான பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT