என் வழி இனிமேல் தனி வழி இல்லை! | தினகரன்

என் வழி இனிமேல் தனி வழி இல்லை!

இனிவரும் நாட்களில்  ரஜினியின் வழி தனி வழி அல்ல. அவரது சொந்த வழியில்தான் அவர் செல்லப் போகிறார் என்று நெருக்கமானவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

"என் வழி தனி வழி என்று ரஜினிகாந்த் பேசிய வசனம் மிகவும் பிரபலம். சினிமாவில் மட்டும் அல்ல சொந்த வாழ்க்கையிலும் அவர் யாரையும் பிரதிபண்ணாமல் வாழ்பவர்.

அந்த காரணத்தால் தான் அவர் வழி தனி வழியாகவே இத்தனை நாட்களாக இருந்தது.அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். ஆனால் இன்னும் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும் அவர் தனது தனிவழியில் நிதானமாக தாமதமாக வந்தாலும் புதிதாக வருவார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்சி தொடங்கும் முன்பே தன் பெயரில் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் ரஜினிகாந்த்.

அரசியலுக்கு வருபவர்கள் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அதை ரஜினி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அரசியல் கட்சி தொடங்கியபோதிலும்  கமல் தொலைக்காட்சி எதுவும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் யாரையும் பிரதிபண்ணாமல் இருக்கும் ரஜினி அரசியலில் தனது முன்னோடிகளின் வழியில் செல்லத் தயாராகி விட்டார். பிற அரசியல்வாதிகளைப் போன்றுதான் அவரும் இருப்பார் என்று தொலைக்காட்சி விஷயத்தில் நிரூபித்துள்ளார். தொலைக்காட்சி தொடங்குவது தவறு இல்லை. ஆனால் ரஜினி ஏதாவது வித்தியாசமான அரசியல் செய்வார் என்று எதிர்பார்க்கும்போது இப்படி சாதாரணமான காரியம் செய்வது அதிருப்தி அளிக்கிறது.

ரஜினிகாந்த் தொலைக்காட்சி தொடங்குகிறார் என்ற செய்தி வெளியானதும் "அதெல்லாம் இல்லை, எங்கள் தலைவர் அப்படி எல்லாம் செய்யவில்லை. இது அவரை பிடிக்காத யாரோ கிளப்பி விட்ட வதந்தி" என்று அவரது ஆதரவாளர்கள் பொங்கினார்கள். சரி, அந்த வதந்தி வதந்தியாகவே போகட்டும் என்று பார்த்தால் "தொலைக்காட்சி தொடங்குகிறேன்" என்று அமெரிக்காவுக்கு ஓய்வு எடுக்கச் செல்லும் முன்பு அறிவித்து விட்டு சென்றுள்ளார் ரஜினி.

இதேவேளை "கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு ஏன் செல்லவில்லை" என்ற நிருபர்கள் கேள்விக்கு ரஜினி பதில் கூறுகையில் "நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. பிறகு பார்க்கலாம்" என கூறியுள்ளது மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் எப்போதும் அரசியலுக்கு வரப் போகிறேன் எனக் கூறினாரோ அன்று முதல் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் சர்ச்சைக்குரியதாகவே மாறி விட்டது. ஒவ்வொரு முறையும் அவர் இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி விடுவதால் மக்கள் மனதில் இருந்து மெல்ல ஒதுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே தனக்கென சொந்தமாக தொலைக்காட்சிஆரம்பிக்கும் வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இப்போது அவர் பேசி வருவதை பார்க்கும் போது மக்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் அதிருப்தியில் உறைந்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது கூட தான் ரஜினி கட்சியை ஆரம்பிக்கவில்லை. ஆனால் அவர் பாதிக்கப்பட்டவர்களை போய் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்படியிருக்கையில் கஜா புயலுக்கு மட்டும் கட்சி ஆரம்பித்தால்தான் செல்ல வேண்டும் என இவராகவே ஒரு வட்டத்தை போட்டு கொள்வது எந்த வகையில் நியாயம்?

அதை விட்டுவிட்டு கட்சி தொடங்கினால் தான் செல்வேன் என கூறுவது, மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க மாட்டார். இடர்பாடுகளில் உள்ளவர்களை போய் சந்திக்க மாட்டார். ஆனால் இவர் வந்து கேட்டால் வாக்கு மட்டும் போட்டு விட வேண்டுமா என்ற நியாயமான கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

நண்பரோ, முக்கியஸ்தரோ உயிரிழந்துவிட்டால் உடனடியாக அவர்களது உடலுக்கு நாம் குடும்ப உறுப்பினர்கள் இல்லாதபட்சத்திலும் இரவோடு இரவாக போய் அஞ்சலி செலுத்துவது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இதுபோல் இடர்களில் தோள் கொடுப்பது என்பதை ரஜினி எப்போதுதான் உணர்வார் என்கின்றனர் மக்கள்.


Add new comment

Or log in with...