திருக்கோவிலில் மஞ்சட் கடவையில் விபத்து; சிறுவன் பலி | தினகரன்

திருக்கோவிலில் மஞ்சட் கடவையில் விபத்து; சிறுவன் பலி

Accident at Akkaraipattu-Pottuvil Road; 8 Years old killed-அ'பற்றில் விபத்து; சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பலி

சாரதி கைது; ஜனவரி 02 வரை விளக்கமறியல்

அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த எட்டு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் பலத்த காயத்திற்குள்ளான 8 வயது றுஸ்மிதன் எனும் சிறுவனே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (17) காலை, திருக்கோவில் ஏ.பி.சி அருகில் பாதசாரிக் கடவையில்  சென்ற குறித்த சிறுவன் மீது, சோடா ஏற்றி வந்த சிறிய ரக கென்ரர் வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதில் காயமுற்ற குறித்த சிறுவன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் ஸ்கேன் அறிக்கையொன்றை பெறுவதற்காக அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் நேற்று (17) பிற்பகல் 3.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து நேற்றிரவு சிறுவனின் மரண விசாரணை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், அக்கரைப்பற்று பதில் நீதவான் சட்டத்தரணி இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான் நடத்தினார்.

குறித்த சிறுவனின் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அம்பாறை சட்ட வைத்திய அதிகாரிக்கு பதில் நீதிபதி வேண்டுகோள் விடுத்ததுடன், பிரேதப் பரிசோதனையின் பின்னர், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும், திருக்கோவில் பொலிசாரைப் பணித்தார்.

சம்பவம் தொடர்பில் குறித்த கென்ரர் வாகனத்தை செலுத்தி வந்த கல்முனையைச் சேரந்த ம. பிரசாந் என்பவரை திருக்கோவில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் இன்றையதினம் (18) அக்கரைப்பற்று நீதிபதி பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் ஜனவரி 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...