Home » பணயக்கைதிகளுக்கு எதிராக ஹமாஸ் எச்சரிக்கை: தொடர்ந்தும் கடும் மோதல்

பணயக்கைதிகளுக்கு எதிராக ஹமாஸ் எச்சரிக்கை: தொடர்ந்தும் கடும் மோதல்

காசாவில் உயிரிழப்பு 18,000ஐ தாண்டியது

by gayan
December 12, 2023 6:34 am 0 comment

காசாவில் போர் தீவிரம் அடைந்துள்ள கான் யூனிஸில் இஸ்ரேலியப் படை தொடர்ந்து முன்னேற முயன்று வரும் நிலையில் பலஸ்தீன போராளிகளுடன் நேற்று (11) உக்கிர மோதல் நீடித்தது. பணயக்கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரித்ததை அடுத்து இஸ்ரேலின் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களும் தீவிரம் அடைந்துள்ளன.

வடக்கு காசாவில் ஜபலியா அகதி முகாம் மீது கடந்த ஞாயிறன்று சரமாரித் தாக்குதலில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதோடு அன்றைய தினத்தில் மாத்திரம் சுமார் 300 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதனால் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 18,000ஐ தாண்டியுள்ளது. இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகமாக உயிரிழந்திருப்பதோடு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கும் மோதல்களில் 49,500 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலியப் படை படிப்படியாக முன்னேறி வரும் நிலையில் அங்கு கடும் மோதல் நிடிக்கிறது. முன்னர் வடக்கு காசாவில் இருந்து வெளியேறுபவர்களுக்கான பாதுகாப்பு பகுதியாக இருந்த கான் யூனிஸின் மத்திய பகுதி வரை இஸ்ரேலிய டாங்கிகள் வந்திருப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் 2.3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட காசாவின் 85 வீதமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதோடு, ஒட்டுமொத்த காசாவும் பாதுகாப்பற்ற பகுதியாக உள்ளது என்று ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் தரைப்படையை அனுப்பிய பின் முதல் முறையாக அந்தப் பகுதியில் தமது பீரங்கிப் படை செயற்பட ஆரம்பித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

மறுபுறம் வடக்கு காசா மற்றும் கான் யூனிஸில் பல இஸ்ரேலிய டாங்கிகளை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் தால் அல் சாதர் பகுதியில் இஸ்ரேலிய டாங்கி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. தெற்கு காசா மோதலில் மூன்று இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு போருடன் தொடர்புபட்ட விபத்து ஒன்றில் மேலும் ஒரு வீரர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியது.

இதனையடுத்து கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி இஸ்ரேல் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட துருப்புகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கைதிகள் பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தை மற்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் இஸ்ரேல் தமது பணயக்கைதிகளை உயிருடன் பெற முடியாது என்று ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது. காசாவில் தொடர்ந்து 137 இஸ்ரேலிய பணயக்கைதிகள் இருப்பதோடு இஸ்ரேலிய சிறைகளில் சுமார் 7,000 பலஸ்தீன கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காசாவில் புதிய போர் நிறுத்தம் ஒன்றை கொண்டு வரவும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியிலும் கட்டார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கட்டாரின் மத்தியஸ்தத்தில் ஏற்கனவே ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஏழு நாள் போர் நிறுத்தம் ஒன்று அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் காஸாவில் தொடரும் போர் சுகாதாரப் பேரழிவை ஏற்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. நிரந்தர நோய்ப் பரவலுக்கான அறிகுறிகள் தென்படுவதாக அது எச்சரித்தது.

காசாவில் நிலைகுலைந்து கொண்டிருக்கும் சுகாதாரக் கட்டமைப்பைச் சீரமைக்கப் பெரும்பாலும் வாய்ப்பே இல்லை என்று சுகாதார அமைப்பின் தலைமைச் செயலாளர் கூறினார்.

700 பேருக்கு ஒரேயொரு குளியலறை; 150 பேருக்கு ஒரேயொரு கழிப்பறை என்று காசா மக்களின் துயரத்தை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது. மக்கள் நாள்தோறும் உணவுக்காகப் போராடுகின்றனர். பாதிப்பேர் பட்டினியால் தவிக்கின்றனர்.

காசாவில் உள்ள உதவி நிலையங்களில் மக்கள் பல மணி நேரம் கால்கடுக்கக் காத்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.

காசாவில் போர் உச்சமடைந்திருக்கு சூழலில் இஸ்ரேலின் லெபனான் எல்லையில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலும் அதிகரித்துள்ளது. மேற்குக் கலிலியில் உள்ள தனது இராணுவத் தளத்தின் மீது ஹிஸ்புல்லா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஆறு வீரர்கள் காயமடைந்ததாக இஸ்ரேல் கூறியது.

இதனை அடுத்து இஸ்ரேலிய எல்லைக்கு அருகில் இருக்கும் லெபனான் நகர் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதலை நடத்தி இருப்பதோடு அங்குள்ள வீடொன்றையும் தகர்த்துள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்று பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை தலைநகர் டமஸ்கஸை நோக்கி இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளை இடைமறித்ததாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியிலும் பதற்றம் நீடித்து வருகிறது. அங்கு இஸ்ரேல் நேற்று நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல்களில் இரு பெண்கள் உட்பட 28 பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டனர்.

இஸ்ரேல் மற்றும் காசா போர் வெடித்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் மேற்குக் கரையில் 3,700 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு 270க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT