பேருவளை ஹெரோயின்; படகு உரிமையாளர் வீட்டில் செய்மதி தொலைபேசி மீட்பு | தினகரன்


பேருவளை ஹெரோயின்; படகு உரிமையாளர் வீட்டில் செய்மதி தொலைபேசி மீட்பு

பேருவளை ஹெரோயின்; படகு உரிமையாளர் வீட்டில் செய்மதி தொலைபேசி மீட்பு-Beruwala Herion Incident-2 Satellite Phoned Found at Troller Owners House

ரூபா 59 இலட்சம் பணம் கண்டுபிடிப்பு

பேருவளை பிரதேச கடலில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபரின் வீட்டிலிருந்து ரூபா  59 இலட்சம் பணம் மற்றும் இரு செய்மதி (Satellite) கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

பேருவளை - பலபிட்டிய பிரதேச கடலில் படகொன்றில் வைத்து கைப்பற்றப்பட்ட 231.054 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதான படகு உரிமையாளரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 05 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் ஹெரோயினை கடத்திச் சென்ற பேருவளையைச் சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தேகநபர்களை நேற்றைய தினம் (12) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, அவர்களை எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (07) ஹெரோயினை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்திய ட்ரோலர் படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எட்டியாந்தோட்டை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, எட்டியாந்தோட்டை, பஹல கராகொடை பிரதேசத்தில் வைத்து, குறித்த படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.

44 வயதான பேருவளை, மொரகல்ல, கொடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த துலீப் சமந்த சில்வாவின் வீட்டில் நேற்றைய தினம் (12) பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அவரது வீட்டிலிருந்து குறித்த பணம், மற்றும் செய்மதி தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பணம் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கப்பெற்றிருக்கலாம் எனவும், செய்மதி தொலைபேசிகள் மூலம் அவ்வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ரூபா 2,778 மில்லியனுக்கும் (ரூ. 277.8 கோடி) அதிகம் என கணக்கிடப்பட்டிருந்ததோடு, இது பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிடைக்கப்பெற்ற இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும்.

2013 ஆம் ஆண்டு சுங்க திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 260 கிலோ கிராமிற்கு அதிக போதைப்பொருளை பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...