அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வோம் | தினகரன்

அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வோம்

லக்ஷ்மி பரசுராமன்

அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பையடுத்து நேற்று (14) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்."எமது அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் நாம் ஆராய்வோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தம்மோடு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக் கின்றது. ஆனால் கூட்டமைப்போ தாங்கள் அரசாங்கத்தில் இணையாமல் பாராளுமன்றத்தில் தனித்து செயற்படப்போவதாக தெரிவிக்கின்றது. அவ்வாறு தனித்து செயற்பட்டால் ஐ.தே.கவின் நிலை என்ன?," என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

லேக்ஹவுஸ் நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகத்தை

எம்மால் புரிந்து கொள்ள முடிந்துள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டையும் மக்களையும் பற்றி சிந்திக்காமல் எப்போதும் தமது கட்சியின் சுயநலத்துக்காக மட்டும் செயற்படும் வங்குரோத்து கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி என்றும் அவர் கூறினார்.

மேற்கத்தேய நாடுகளுடன் இணைந்து எப்போ தும் ஜனநாயகம் பற்றி பேசும் ஐ.தே.கவின் ஜனநாயக நிலைப்பாட்டை நாம் லேக்ஹவுஸ் சம்பவத்திலிருந்து அறிந்து கொண்டோம். நடக்க முடியாத ஒருவருடைய ஊன்று கோலைப் பறித்து லேக்ஹவுஸ் ஊழியர்களை தாக்கிய அவர்களின் ஜனநாயகத்தை தாம் புரிந்து கொண்டதாகவும்,ஐ.தே.க தமது தவறுகளை மறைப்பதற்காகவே ஆட்சிக்கு வர முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்றத்தை கலைப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்ற மகிழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சியினர் பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமாயின் ஐ.தே.க தோல்வியடைவது உறுதியாகியிருந்த நிலையில் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


Add new comment

Or log in with...