Thursday, March 28, 2024
Home » 5,000 இஸ்ரேலிய படையினர் காயம், பலர் ஊனம்; இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை

5,000 இஸ்ரேலிய படையினர் காயம், பலர் ஊனம்; இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை

by Rizwan Segu Mohideen
December 11, 2023 2:12 pm 0 comment

காசாவில் போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொடக்கம் 5,000 இற்கும் அதிகமான இஸ்ரேலிய படையினர் காயமடைந்திருப்பதாகவும் மனநல நெருக்கடி நிலை ஒன்று அதிகரித்து வருவதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரித்திருப்பதாக இஸ்ரேலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஒவ்வொரு நாளும் காயமடைந்த சுமார் 60 படை வீரர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் புனர்வாழ்வு திணைக்களத்திற்கு வருவதாக அந்த அமைச்சின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் குறைந்தது 2,000 இஸ்ரேலிய படையினர் உடல் வலுவீனர்களாக அறிவிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நாயகம் லிமோர் லூரியா, ‘யேடியோத் அஹ்ரோனொத்’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். காயமடைந்துள்ள புதிய படையினரை அனுமதிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதை சுகாதார அதிகாரிகள் விரைவுபடுத்தி இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இதற்கு முன்னர் நாம் இப்பாடியான ஒரு நிலையை சந்தித்ததில்லை’ என்று கூறிய லூரியா, போர் ஆரம்பித்தது தொடக்கம் 5,000 படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் சுமார் 60 வீதத்தினர் கைகள் மற்றும் கால்களில் மோசமான காயத்தை சந்தித்திருப்பதாகவும் பலருது உடல் பாகங்களை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் லூரியோ குறிப்பிட்டார்.

சுமார் 12 வீத காயங்கள் மண்ணீரல், சிறுநீரகம் மற்றும் உள் உறுப்புகளின் சிதைவு போன்றவற்றால் ஏற்பட்டிருப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொடக்கம் குறைந்தது 420 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT