இஸ்ரேலிய துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனர் பலி | தினகரன்

இஸ்ரேலிய துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனர் பலி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரோன் நகருக்கு அருகில் இஸ்ரேலிய படையினரால் பலஸ்தீனர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

27 வயது ஒமர் அவ்வாத் என்ற இளைஞனே இவ்வாறு சுடப்பட்டிருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். சோதனைச் சாவடிக்கு அருகில் பொலிஸாரை நோக்கி கார் வண்டியை செலுத்தியதை அடுத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

“சந்தேகத்திற்கு இடமான வாகனத்தின் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. எந்த அதிகாரிக்கும் காயம் ஏற்படவில்லை” என்று இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் மிக்கி ரொசன்பேல்ட் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குக் கரையில் உள்ள குடியேற்ற பகுதியின் நுழைவாயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாகனத்தில் வந்தவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் இஸ்ரேல் இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்குக் கரையில் இஸ்ரேலியர்கள் மீதான பலஸ்தீனர்களின் தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. கடந்த நவம்பர் 26 ஆம் திகதி இஸ்ரேல் படையினர் மீது பலஸ்தீனர் ஒருவர் காரை மோதவிட்ட தாக்குதலில் மூவருக்கு காயம் ஏற்பட்டது. அந்த ஓட்டுநர் இஸ்ரேல் படையினரால் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


Add new comment

Or log in with...