பெப்ரவரி 24 இல் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அறிவிப்பு | தினகரன்

பெப்ரவரி 24 இல் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அறிவிப்பு

தாய்லாந்தில் வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தமது பிரசாரங்களை ஆரம்பிக்க அந்நாட்டு இராணுவம் அனுமதி அளித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் சதிப்புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து தாய்லாந்தில் அரசியல் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து இராணுவம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்ந்து பிற்போடப்பட்டு வந்து.

2014 ஆம் ஆண்டு பிரதமர் யிங்லுக் ஷினவாத்ரா மற்றும் அதிக மக்கள் ஆதரவு கொண்ட பியு தாய் கட்சியை கவிழ்த்தே இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தல் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ராவின் சிவப்புச் சட்டை ஆதரவாளர்கள் மற்றும் இராணுவம் மற்றும் அரச வம்ச ஆதரவாளர்களுக்கு இடையிலான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தக்சின் முகாம் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் தாய்லாந்தில் இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருப்பதோடு அவர்களின் ஆட்சிக்கு எதிராக இரண்டு முறை இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றுள்ளது.

தக்சின் சினவாத்ரா 2006 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.


Add new comment

Or log in with...