Thursday, March 28, 2024
Home » அமெரிக்காவின் ‘வீட்டோ’வை அடுத்து தெற்கு காசாவில் தாக்குதல்கள் தீவிரம்

அமெரிக்காவின் ‘வீட்டோ’வை அடுத்து தெற்கு காசாவில் தாக்குதல்கள் தீவிரம்

- மனிதாபிமான ‘பேரழிவு’ பற்றி எச்சரிக்கை

by Rizwan Segu Mohideen
December 11, 2023 8:44 am 0 comment

தெற்கு காசாவில் இஸ்ரேலியப் படை நேற்று (10) குண்டுத் தாக்குதல்களை தீவிரப்படுத்தி பலஸ்தீன போராளிகளுடன் கடும் மோதலில் ஈடுபட்ட நிலையில் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தாக்குதலில் இருந்து தப்புவதற்கு பாதுகாப்பான இடங்களை தேடி வெளியேறி வருகின்றனர்.

காசா பகுதியில் நோய் மற்றும் பட்டினி அதிகரித்து வரும் நிலையில் பேரழிவு கொண்ட மனிதாபிமான நெருக்கடி ஒன்று பற்றி உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன.

இஸ்ரேலிய துருப்புகள் தெற்கு நகரான கான் யூனிஸ் மற்றும் அங்கிருந்து எகிப்துடனான எல்லையை ஒட்டிய ரபா செல்லும் பாதையை இலக்கு வைத்து கடும் தாக்குதல்களை நடத்துவதாக காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

கான் யூனிஸுக்கு அருகில் ஹமாஸ் மற்றும் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் இஸ்ரேலிய படைகளுடன் நேற்று கடும் மோதலில் ஈடுபட்டு வந்ததாக அந்த போராட்டக் குழுக்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் போரில் காசாவில் குறைந்தது 17,700 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் முன்னெப்போதும் இல்லாத அளவு பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தி சுமார் 1200 பேர் வரை கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப்போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

காசாவில் தொடர்ந்து 137 பணயக்கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

காசாவில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு பெறுவதற்கு சிறிய அளவான தேர்வுகளே இருக்கும் நிலையில் கணிசமானவர்கள் மருத்துவமனைகளில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதல்களால் கடும் சேதத்திற்கு உள்ளாகி இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் வடக்கில் உள்ள காசா நகரில் இருக்கும் அல் ஷிபா மருத்துவமனையில் அயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

அந்த மருத்துவமனையின் மூற்றவெளிகள் மற்றும் தோட்டங்களில் கட்டட இடிபாடுகளுக்கு மத்தியிலும் சாதாரண துணிகளால் அமைக்கப்பட்ட கூடாரங்களில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இஸ்ரேலிய விமானங்கள் மற்றும் டாங்கிகள் கடுமையாக குண்டு வீசி வருவதால் இங்கு வந்ததாக காசா நகரின் ஷஜையா பகுதியைச் சேர்ந்த 56 வயது சுஹைல் அபூ டல்பா தெரிவித்தார்.

‘அது பயங்கரமாக இருந்தது. ஷெல் குண்டு ஒன்று வீட்டில் விழுந்து எனது 20 வயது மகன் காயமடைந்தான்’ என்று அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். ‘நாம் பழைய நகருக்குச் சென்றோம் அங்கே எல்லாவற்றின் மீதும் தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டிருந்தன. எமக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார். ‘அவர்கள் (இஸ்ரேல்) மீண்டும் மருத்துவமனைக்குள் வருவார்களா என்பது எமக்குத் தெரியவில்லை’ என்றார். மத்திய காசாவின் அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு 24 மணி நேரத்திற்குள் 71 உடல்கள் வந்ததாக அந்தப் பகுதியின் சுகாதார நிர்வாகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

தெற்கு பகுதியின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு 62 சடலங்கள் வந்ததாக சுகாதார நிர்வாகம் கூறியது.

மருத்துவமனைக்குள் குழந்தைகள் உட்பட மற்றவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக தரையில் காத்திருக்கும் நிலையில் வெளியே இஸ்ரேலிய தாக்குதலால் எரிந்த கட்டடம் ஒன்றை அணைக்கு பணியில் தீயணைப்பாளர்கள் ஈடுபட்டு வந்ததாக அங்குள்ள ஏ.எப்.பி செய்தியாளர் விபரித்துள்ளார்.

‘நிலைமை பேரிடம் மாத்திரமல்ல பேரழிவு கொண்டது’ என்று ஒக்ஸ்பாம் அமைப்பின் புஷ்ரா காலிதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை காசா மக்களில் பாதிப்பேர் பட்டினியில் வாடுவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது.

உலக உணவுத்திட்டப் பிரிவின் துணை பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் காசாவுக்கு நேரடிப் பயணத்தை மேற்கொண்ட பின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிவித்தார். சற்றும் எதிர்பாராத பயம், குழப்பம், துயரத்தைப் பார்த்ததாக அவர் குறிப்பிட்டார். காசாவின் சில வட்டாரங்களில் 10இல் 9 பேர் தினசரி சாப்பாடு இல்லாமல் தவிப்பதாக ஸ்காவ் கூறினார்.

காசாவில் தற்போதிருக்கும் நிலைமையில் உணவை விநியோகம் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்று அவர் கூறியதாக பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்தது.எகிப்து எல்லையோரம் இருக்கும் ரபா பாதையில்தான் தற்போது காசாவுக்கு உணவு செல்கிறது. அதேபோன்று இன்னொரு பாதையைத் திறக்க வேண்டும் என்று உலக உணவுத் திட்டப் பிரிவு கேட்கிறது.

சிறுவர்களுக்கான மரண தண்டனை
காசாவின் 2.4 மில்லியன் மக்கள் தொகையில் 1.9 மில்லயன் மக்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த குறுகலான நிலப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முடியாது முடக்கப்பட்டிருக்கும் நிலையில் எகிப்து எல்லைக்கு அருகாமையில் உள்ள ரபாவில் மக்கள் பாரிய அளவில் அடைக்கலம் பெற்று வருகின்றனர்.

இந்த மோதலால் சுமார் ஒரு மில்லியன் சிறுவர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில் தெற்கு காசாவில் மோதல் தீவிரம் அடைந்திருப்பதால் சிறுவர்களுக்கான பாதுகாப்பான இடங்கள் அங்கு தீர்ந்து வருகின்றன. ‘அவர்கள் மேலும் மேலும் தெற்காக குடிநீர், உணவு அல்லது பாதுகாப்பு இல்லாத மக்கள் நிரம்பி இருக்கும் சிறிய பகுதிக்குள் சுருங்கியுள்ளனர். இதனால் சுவாசத் தொற்று மற்றும் நீர் மூலம் பரவக்கூடிய நோய்கள் அதிகரிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது’ என்று யுனிசெப் நிறுவனத்தின் அதெல் கோதிர் தெரிவித்துள்ளார்.

‘காசா பகுதிக்கு செல்லும் உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் சவால்களும் குழந்தைகளுக்கான மற்றொரு மரண தண்டனையாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

காசாவில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி குறிப்பிட்டிருப்பது அங்கு மனிதாபிமான நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் காசாவில் இஸ்ரேலிய துருப்புகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில் அங்கு கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. பணயக்கைதிகளை மீட்கும் முயற்சிகளும் தோல்வி அடைந்து வரும் நிலையில் இஸ்ரேலிய தாக்குதல்களால் 25 வயது சஹர் பீரி என்ற பணயக்கைதி கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவத்துள்ளது.

அமெரிக்காவின் வீட்டோவால் பதற்றம்
போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது. இந்தத் தீர்மானம், உண்மை சூழலில் இருந்து வேறுபட்டிருப்பதாகவும் காசாவில் ஹமாஸ் அதிகாரத்தில் நீடிப்பதற்கு உதவும் என்றும் அமெரிக்க தூதுவர் ரொபட் வூட் இதன்போது கூறியிருந்தார்.

அமெரிக்காவின் வீட்டோவை மனிதாபிமானமற்றது என ஹமாஸ் அரசியல் பிரிவு உறுப்பினர் இஸாத் அல் ரெஷிக் விபரித்துள்ளார். 2007 இல் காசாவில் ஹமாஸிடம் அதிகாரத்தை இழந்த பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இந்த வீட்டோ மூலம் இஸ்ரேலின் போர் குற்றங்களுக்கு அமெரிக்கா உடந்தையாகியுள்ளது என்றார்.

மறுபுறம் அமெரிக்காவின் வீட்டோவை வரவேற்றிருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஹமாஸை ஒழிக்கும் போரை இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுக்கும்’ என்றார்.

எனினும் வீட்டோ பயன்படுத்தப்பட்டிருப்பது பிராந்தியத்தில் கட்டுப்படுத்த முடியாத சூழலை ஏற்படுத்தும் என்று ஹமாஸ் அமைப்பு ஆதரவான ஈரான் எச்சரித்துள்ளது.

காசாவுக்கு உணவு மற்றும் மருந்துகள் அனுமதிக்கப்படும் வரையில் இஸ்ரேலிய துறைமுகங்களை நோக்கிச் செல்லும் அனைத்து கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் ஆதரவு யெமன் ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் சனிக்கிழமை (09) எச்சரித்தனர்.

இதேவேளை செங்கடலில் இரண்டு ஆளில்லா விமானங்களை தமது போர் கப்பல்களில் ஒன்று சுட்டு வீழ்த்தியதாக பிரான்ஸ் இராணுவம் நேற்று கூறியது. அந்த ஆளில்லா விமானங்கள் யெமன் துறைமுகத்தில் இருந்து கப்பலை நோக்கி வந்ததாக அது கூறியது.

அதேபோன்று இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையில் தொடர்ந்து நீடிக்கும் மோதல்கள் பிராந்தியத்தில் பரந்த அளவில் மோதல் ஒன்றை தூண்டும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது. லெபனானில் இருந்து இடம்பெற்ற தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்தாக இஸ்ரேல் இராணுவம் சனிக்கிழமை கூறியிருந்தது.

தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா அமைதிகாக்கும் நிலை ஒன்றின் மீதும் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.நா படை குறிப்பிட்டுள்ளது. எனினும் அந்தத் தாக்குதல் எங்கிருந்து வந்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருவதாக அது கூறியது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல்களில் மேலும் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் கூறியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT