Friday, April 26, 2024
Home » இந்தியாவின் முதன்மையான கலைநயமிக்க இலக்கிய நகரம் கேரளத்தின் கோழிக்கோடு

இந்தியாவின் முதன்மையான கலைநயமிக்க இலக்கிய நகரம் கேரளத்தின் கோழிக்கோடு

by Rizwan Segu Mohideen
December 11, 2023 8:40 am 0 comment

அண்மையில் நான் கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு சென்றிருந்தேன். இங்கு வாழும் பிரபல மலையாள எழுத்தாளர் உள்ளூர் பரமேஸ்வரனை சந்திப்பதற்காகச் சென்றேன். இவர் திருவாசகம், திருப்பாவை, பாரதியார் கவிதைகள், திருக்குறள் போன்றவற்றை தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.

திருவாசகம், திருப்பாவை பொழிபெயர்ப்புக்காக இவருக்கு சாகித்திய அக்கடமி விருதும், நல்லி திசை எட்டும் இலக்கிய விருதும் வழங்கப்பட்டுள்ளன. கோழிக்கோட்டிலிருந்து இவரைப் போலவே பல எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

கோழிக்கோடு கடற்கரையுடன் கூடிய அழகிய நகரம். மலையாளத்தில் முக்கியமான இலக்கிய நகரமாகவும் திகழ்கிறது. பழைமையைப் பாதுகாத்து புதுமையை வரவேற்கும் கோழிக்கோடு நகரம் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் நகரமாகவும் விளங்குகிறது

நகரின் பல பகுதிகளில் எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் காணமுடிகிறது. நகரின் நடுப்பகுதியில் உள்ள மிட்டாய் கடைத்தெரு என்ற எஸ்.கே தெருவில் நாடக ஆசிரியரும், இயக்குநருமான எஸ்.கே. பொற்றேகாடு என்ற நாடகக்கலைஞருக்கு மார்பளவில் சிலை வைத்து பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தப்பகுதியில் இவர் இயக்கிய நாடகங்களின் கதாபாத்திரங்களையும் ஓவியங்களாக தீட்டி வைத்துள்ளனர்.

பொற்றேகாடு காலத்தில் இங்குதான் பல நாடகக்கலைஞர்கள் ஒன்றுகூடி கதைகள் பற்றி விவாதித்து நாடகங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் அடையாளமாக இங்கே சிமெந்தினால் இருக்கைகளையும் வடிமைத்து வைத்துள்ளனர். இன்று இந்த இருக்கைகளில் மக்கள் உட்கார்ந்து ஓய்வெடுக்கிறார்கள்.

கோழிக்கோட்டின் கடற்கரைப்பகுதி மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுற்றுச்சுவர்களில் மலையாள எழுத்தாளர்களின் உருவங்களை வண்ண ஓவியமாக தீட்டிவைத்துள்ளனர்.

வைக்கம் முகம்மது பசீர், எம்.டி வாசுதேவனார், குதிரை வட்டம் பாபு போன்ற எழுத்தாளர்களின் ஓவியங்களையும் அவர்கள் எழுதிப் புகழ்பெற்ற கதைகளின் கதாபாத்திரங்களையும் வண்ண ஓவியமாக தீட்டியுள்ளனர்.

இதேபோல மலையாளத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான பாபு ராஜின் ஓவியமும் தீட்டப்பட்டுள்ளது.

இந்த ஒவியங்களை மக்கள் பார்க்கும் போது அந்தக் கலைஞர்களை யார் என்று தெரிந்துகொள்ளவும் மறக்காமல் இருப்பதற்கும், வளர்ந்துவரும் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

கோழிக்கோட்டுக்கு இன்னொரு சிறப்பும் தற்போது கிடைத்துள்ளது. உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு யுனெஸ்கோ 55 நகரங்களை அடையாளப்படுத்தியது. அதில் கோழிக்கோட்டை இந்தியாவின் முதல் இலக்கிய நகரமாக அறிவித்துள்ளது. படைப்பாற்றல் மற்றும் கலாசார வளர்ச்சியில் கோழிக்கோடு முன்னிலையில் இருப்பதாலும், 500 இற்கும் மேற்பட்ட நூலகங்கள், 70 இற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இருப்பதாலும் வருடாந்த கேரள இலக்கியத்திருவிழாவும், புத்தகத் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுவதாலும், இந்நகரத்தை சிறந்த இலக்கிய நகரமாக தெரிவு செய்ததாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. கோழிக்கோட்டுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் 1498 ஆம் ஆண்டு வாஸ்ெகாடகாமா கடல்வழியாக வந்து காப்பாடு என்ற கடற்கரையில் கால்பதித்துள்ளார். கோழிக்கோட்டிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் காப்பாடு கடற்கரை அமைந்துள்ளது. வாஸ்கொடகாமா இங்கே வந்து இறங்கியதின் நினைவாக ஒரு கல்தூணும் வைக்கப்பட்டுள்ளது.

கடற்கரை ஓரத்தில் கடல் அலைகள் வரவேற்கும் கலைநயம் மிக்க நகரமாக விளங்கும் கோழிக்கோட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.

அண்மையில் நான் பார்த்த இடங்களையும் என் கவனத்திற்கு வந்த அனுபவங்களையும் மட்டுமே இங்கே பதிவு செய்துள்ளேன். நீங்களும் ஒருமுறை கோழிக்கோட்டுக்கு சுற்றுலா வந்தால் மனதைக் கவரும் இடங்களைப் பார்க்கலாம்.

நந்தவனம் சந்திரசேகரன்
இந்தியா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT