இன நல்லிணக்க பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி | தினகரன்

இன நல்லிணக்க பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி

இன நல்லிணக்கப் பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி-Subathra Ramaya Pre School-Reconciliation Service

கல்முனை பிரதேசம் பல்லினங்கள் வாழ்கின்ற பிரதேசமாகும். முஸ்லிம்கள், தமிழர்கள், கிறிஸ்த்தவர்கள், பௌத்தர்கள் என பல்லினத்தைச் சார்ந்தவர்கள்  இங்கு வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆயுதப்போராட்ட காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கல்முனையும் ஒன்றாகும். அவ்வாறு பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் அம் மக்கள் தங்களிடையே ஒற்றுமையை இன்னும் பலப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது.

இன நல்லிணக்கப் பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி-Subathra Ramaya Pre School-Reconciliation Service

கல்வி என்பது இப்பிரதேசத்தில் வாழும் அனைவராலும் முக்கிய விடயமாக கருதப்படுகின்றது. அது பெற்றோர்களால் மாத்திரமல்ல மதகுருமார்களாலும் முக்கிய விடயமாக கருதப்படுகின்றது. அக்கல்வியினூடாக இப்பிரதேசத்தில் ஒரு நிலையான சமாதானத்தை கொண்டு வருவதற்கு வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றார் கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்னதேரர். அவர் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டம்தான் சுபத்ரா ராமய முன்பள்ளி.

இன நல்லிணக்கப் பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி-Subathra Ramaya Pre School-Reconciliation Service

“இந்த பாலர் பாடசாலை 2005 ஆம் ஆண்டு எமது விகாரையின் வளாகத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் அதற்கென கட்டிடம் ஒன்று நிர்மாணித்து தரப்பட்டு அதில் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையில் தற்பொழுது 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்தப் பாடசாலையை எதிர்கால சந்ததியினர் இனம், மதம், சாதி,மொழி பேதமில்லாமல் நாட்டில் பொதுவான சமாதானத்தை, ஒற்றுமையை பலப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்வதற்காகத்தான் இப் பாடசாலையை நான் ஆரம்பித்ததன் நோக்கமாகும்” என்று கூறினார் கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்.

கல்முனைப் பிரதேசத்தில் இருக்கும் பாடசாலைகள் அனைத்தும் இனரீதியான அடையாளங்களுடனயே இயங்குகின்றன. அவைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது இன மக்களுடனயே பழக்கப்படுகின்றனர். அவர்கள் ஏனைய இன, மத கலாசாரங்ளை அறிந்துகொள்வதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றன. அதற்கு அடித்தளம் இடுவதாகவே இந்தப் பாடசாலை அமைந்துள்ளது.

இன நல்லிணக்கப் பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி-Subathra Ramaya Pre School-Reconciliation Service

“2005 ஆம் ஆண்டு இந்தப் பாடசாலையை ஆரம்பிக்கும் போது மூவினங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டே ஆரம்பித்தோம். தற்பொழுது முப்பதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் கற்று வருகின்றனர். இப் பாடசாலையில் கல்வி கற்று வரும் மாணவர்களினது மத விழாக்களை இங்கு கொண்டாடி மகிழ்விப்போம். சரஸ்வதி பூஜை, ரமழான், கிறிஸ்மஸ் என எல்லா மத நிகழ்வுகளையும் பாடசாலை மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் சாது ஆகியோரோடு இணைந்து கொண்டாடுவோம். அப்போது அந்தந்த கலாசார நிகழ்ச்சிகள், உணவுகள் என்பன அங்கு பரிமாறப்படும். அதேபோன்று ஒவ்வொரு காலையிலும் சமய அநுஷ்டானம் நடைபெறும். அதில் தேவாரம், குர்ஆன், பைபில், பன ஆகியன இங்கு ஓதிக் காண்பிக்கப்பட்டுத்தான் பாடசாலை ஆரம்பிக்கபடுகின்றது. அப்போது எல்லா மாணவர்களும் எல்லா மதங்களின் அநுஷ்டானங்களையும் கற்றுக் கொள்வதுடன் அதை அவர்களும் சொல்லிப் பழகுவார்கள்.” என்று பாடசாலையில் நடக்கும் மத நல்லிணக்கத்துக்கான செயற்பாடுளை  இவ்வாறு தெளிவுபடுத்தினார் பாடசாலையின் தலைமை ஆசிரியை விஜயகுமார் ராதிகா.

இன நல்லிணக்கப் பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி-Subathra Ramaya Pre School-Reconciliation Service

இவர் இப் பாலர் பாடசாலை ஆரம்பித்த காலம் தொட்டு இங்கு கற்பித்து வரும் ஒரு ஆசிரியை ஆவார். இவரோடு சேர்த்து இன்னும் இரண்டு ஆசிரியைகளும் இங்கு கற்பித்து வருகின்றனர். பாடசாலையின் பொறுப்பாளராக செயற்படும் ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தமிழ் மொழியில் நன்கு உரையாடக் கூடிய ஒருவராவார். இவர்களிடையே தொடர்பாடல் ஒரு பிரச்சினையாக காணப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் கூட்டங்களை வைத்து பிரச்சினைகளை ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டு பாலர் பாடசாலையை முன்னெடுத்துச் செல்கின்றார்கள்.

பாடசாலையில் சிறப்பாக செயற்படும் பிள்ளையே ஒவ்வொரு பெற்றாரினதும் எதிர்பார்ப்பாகும். ஒரு பிள்ளையில் அவர்கள் மிகவும் மதித்த பண்புகள், கற்றலாற்றல், பணிவன்பு, வளர்ந்தோருக்கு மரியாதை செலுத்துதல், நன்னடத்தை என்பவேயாகும். அவர்களது இலட்சிய பிள்ளை கல்வியறிவுபெற்ற, சமயப் பற்றுள்ள, கலாசார பாரம்பரியங்ளைக் கொண்ட தம்மை தமது விருத்தாப்பிய காலத்தில் பராமரிக்கும் பிள்ளையாகும். அவ்வாறான எதிர்பார்ப்புக்கு இப் பாடசாலையின் செயற்பாடுகளும் அமையப் பெற்றுள்ளன.   

இன நல்லிணக்கப் பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி-Subathra Ramaya Pre School-Reconciliation Service

“எனது பிள்ளை இங்கு கல்வி கற்பதால் எல்லோரோடும் பழகும் அளவுக்கு வந்திருக்கிறது. எல்லா மதங்களைப் பற்றியும் எனது பிள்ளை கற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு நாட்டில் நாம் இருந்து கொண்டு வேறுபாடுகளோடு வாழ முடியாது. அதற்கேற்றாற்போல்  எமது பிள்ளைகளின் கல்விச் சூழலும் அமைய வேண்டும். அதற்கு இவ்வாறான பாலர் பாடசாலை ஒன்றை அமைத்துத் தந்தமைக்கு விகாராதிபதிக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று இங்கு கல்விகற்கும் மாணவி ஒருவரின் தாயான ஏ.றிப்கா நன்றியுணர்வுடன் கூறுகிறார்.

பாடசாலை நாட்களில் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு பெற்றார் பிள்ளைகளுக்கு காலை ஆகாரம் வழங்குகிறார்கள். அவர்கள் தங்களது வீடுகளில் சமைத்த சத்துணவைக் கொண்டு வந்து பிள்ளைகளுக்கு பரிமாறுகிறார்கள். அதேபோன்று மாதாந்தம் இப் பாடசாலையை சிரமதானம் செய்வதற்கும் எல்லாப் பெற்றோரும் வந்து பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். பெற்றாரின் ஒத்துழைப்பு இல்லாவிடின் இவ்வாறான பல்லின பாலர் பாடசாலையை கொண்டுசெல்வது கடினம்தான். அதற்கு பொதுநோக்கமுடைய சமாதான விரும்பியான பெற்றோர்களும் அவசியம்.

இன நல்லிணக்கப் பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி-Subathra Ramaya Pre School-Reconciliation Service

“இந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் போன்று அவர்களது பெற்றோர்களிடையேயும் நல்ல புரிந்துணர்வும் ஒற்றுமையும் காணப்படுகிறது. இங்கு கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் எம்மிடம் வந்து எங்களது பிள்ளைகள் தமிழ் பிள்ளைகள் போன்று தேவாரம் படித்துக் காட்டுகிறார்கள், சிங்களப் பிள்ளைகள் போன்று புத்தம் சரணம் சொல்லிக் காட்டுகிறார்கள், முஸ்லிம் பிள்ளைகள் போன்று தொழுது காட்டுகிறார்கள். எங்களுக்கு பார்ப்பதற்கு மிகவும் சநதோசமாக இருக்கிறது என்று அவர்கள் எம்மிடம் கூறுகிறார்கள்”  என்று பெருமையுடன் தெரிவித்தார் இப் பாடசாலையில் கற்பிக்கும் இன்னுமொரு ஆசிரியையான பெனிஸ்டா ரொஸைரோ. இவர் கிறிஸ்த்தவ மதத்தை பின்பற்றும் ஒரு ஆசிரியை ஆவார். உண்மையில் இங்குள்ள ஆசிரியர் குழாத்தை எடுத்து நோக்கினால் அவர்களிடையேயும் ஒரு மத பல்லினத்துவத்தையே காணமுடிகிறது.

இன நல்லிணக்கப் பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி-Subathra Ramaya Pre School-Reconciliation Service

“எங்களுடைய சின்ன காலத்தில் பிற மதத்தைப் பற்றி எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை.கோவில், பன்சலை போன்ற வணக்கஸ்த்தலங்களில் இருக்கும் சாமியைப் பற்றி எங்களுடைய பிள்ளைகள் எங்களுக்கு வந்து சொல்லித் தருகிறார்கள். ஏனென்றால் எங்களுடைய பெற்றோர் அவ்வாறு பிற மதஸ்த்தலங்களுக்கெல்லாம் செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் நாங்கள் மற்ற சமூகங்களோடு இணைந்து வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இன்று எமது பிள்ளைகள் சின்னதிலிருந்து இவ்வாறு பழக்கப்படுவதால் அவர்களிடையே இனரீதியான பாகுபாடு இருக்காது. அதே போன்று வணக்கஸ்த்தலங்களில் எப்படி நடந்துகொள்வது என்றும் அவர்களுக்கு சின்ன வயதிலே புரிந்துவிடுகிறது.” என்று தனது பிள்ளையின் முன்னேற்றம் குறித்து இப் பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளையொருவரின் தாயாரான ரூபபாலன் சச்சு மகிழ்ச்சி படக் கூறினார்.

“இந்த பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளைப் போன்று பெற்றோர்களுக்கிடையேயும் நல்ல புரிந்துணர்வும் ஒற்றுமையும் ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் காலத்தில் நாங்கள் எப்படி ஒற்றுமையாக இருந்தோமோ அவ்வாறான ஒரு நிலையை இந்தப் பாடசாலையினூடாக நான் காண்கின்றேன். முஸ்லிம், கிறிஸ்த்தவ பெற்றோர்கள் எங்களுடைய வீட்டுக்கு வருகிறார்கள். நாங்கள் அவர்களுடைய வீட்டுக்கு போவதுமான ஒரு சூழல் சாதுவால் உருவாக்கப்பட்ட இந்தப் பாலர் பாடசாலையினூடாக ஏற்பட்டிருக்கின்றது.” என்று தனது பேரக் குழந்தையை பாடசாலை விட்டபோது அழைத்துச் செல்வதற்காக வந்த எஸ். ஆசீர்வாதம் கூறினார்.

கடந்த இரண்டு தசாப்த கால ஆயுதப் போராட்டம், இடைக்காலத்தில் இந்த மக்களிடையே இன முரண்பாடு, பிரிவினை என்பவற்றை ஏற்படுத்தி விட்டுச்சென்றது. அவற்றையெல்லாம் விடுத்து அக்காலத்தில் தாம் எவ்வாறு ஒன்றுபட்டு இருந்தோமோ அவ் வாழ்க்கையை தம் வாழ்கைக் காலத்தில் இன உறவுகளோடு மீண்டும் வாழ எஸ். ஆசீர்வாதம் போன்ற முதியோர்கள்  விரும்புகிறார்கள்.

இன நல்லிணக்கம் என்பது பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசத்தில் மிகவும் அவசியமானதாகும். அது சிதைந்து கிடக்கின்ற போது அதை மீண்டும் இலகுவில் கட்டயெழுப்பி விட முடியாது. அழிவடைந்த கட்டிடங்களை விரைவில் நிர்மாணிப்பது போன்று மனிதர்களுடைய உள்ளங்களில், நடத்தையில் மாற்றங்ளை கொண்டு வந்துவிட முடியாது. அதனை நீடித்து நிலைத்திருக்கக் கூடிய சமாதானமாக மாற்ற அடிப்படையிலிருந்து கட்டயெழுப்பப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு இளம் தலைமுறையினர் முக்கியமானவர்கள்.      

இன நல்லிணக்கப் பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி-Subathra Ramaya Pre School-Reconciliation Service

“இந்தப் பாடசாலை எம் மத்தியில் எல்லோராலும் பேசப்படுகின்ற தேசிய ஒருமைப்பாடு, தேசிய நல்லிணக்கம் என்பவற்றை பாடசாலைகளினூடாக கட்டியெழுப்பவேண்டும் என்கின்ற திட்டத்தின் கீழ் ஒருங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருவது மிகவும் வரவேற்க்கத்தக்க ஒரு விடயம். எந்தப் பாடசாலையிலும் காணமுடியாத நான்கு மதத்திற்கும் மதிப்பளித்து கல்வி வழங்குகின்ற இந்த முறை எம் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாகும். பாடசாலைகளிலேயே மாணவர்கள் நல்ல விழுமியங்களை கற்றுக்கொள்கிறார்கள். அதற்கான வழி அங்குதான் பிறக்கின்றது. இது மழலைச்செல்வங்களின் முன்பள்ளியிலேயே வித்திடப் படுகின்றது. இதனை இந்தப் பாடசாலை மிகவும் திறமையாக செய்து வருவதனை அண்மைக் காலமாக நான் கண்டு வருகின்றேன்.”  என்று கல்முனை சிறீ மாமாங்க வித்தியாலய அதிபர் திருமதி சுகன்யா தெரிவித்தார்.

அணமையில் சுபத்ரா ராமய முன்பள்ளியின் 2018 ஆம் ஆண்டுக்கான மாணவர்களின் கலை விழா  கல்முனை சிங்கள மகாவித்தியாலயத்தில் நடைபெற்றபோது அதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அதிபரின் இக் கருத்து பிள்ளைகளின் உருவாக்கத்தில் பாடசாலையின் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது.

“எமது பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் இன ரீதியான பாடசாலைக்குச்சென்று கற்கின்றபோது அவர்கள் மீண்டும் பல்லினம் வாழ்கின்ற இந்த நாட்டில் ஒரு இனக் கலாசாரத்துக்குள் முடக்கப்படுவார்கள் என்பதுதான் எனக்கிருக்கிற கவலையாகும். இதற்கு முழுக் காரணமும் இங்கிருக்கின்ற இனரீதியான பாடசாலைகளாகும். எமதுநோக்கம் வெற்றியடையும் வரைக்கும் எமது இந்தப் பணிதொடரும். சமாதானத்தை, நல்லிணக்கத்தை விரும்புகின்ற அனைவரும் இந்தப் பாடசாலையை விஸ்த்தரிப்பதற்கு பங்களிப்புச் செய்ய முன் வருமாறு அன்புடன் அழைக்கின்றேன்.” என்று இந் நாட்டின் கல்விமுறை மீதான தனது கவலையையும் தளராத தனது நம்பிக்கையையும் இவ்வாறு வெளிப்படுத்தினார் கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்.

தேரரின் கவலை இங்கு நியாயமானதாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது. இன ரீதியான பாடசாலைகளில் மாணவர்கள் முடங்கிக் கிடக்கின்றபோது பல்லின சமூகம் வாழும் இந்நாட்டில் எதிர்கால சமூகம் சகவாழ்வுக்கு எவ்வாறு தகுதிபெற முடியும். பொருளாதாரம், கல்வி என எல்லாத் துறைகளிலும் தனித்துசெயற்படுகின்றபோது பிற மதங்களை கலாசாரங்ளை அறிந்துகொண்டு எவ்வாறு மதிப்பளித்து வாழப்பழக முடியும் என்பவையெல்லாம் இங்குள்ள கேள்விகளாகும்.

பிள்ளைகள் அவர்களது விருத்தி மீது செல்வாக்கு செலுத்தும் குடும்பம், சமுதாயம், கலாசாரம் ஆகியவற்றைக் கொண்ட சந்தர்ப்மொன்றில் வாழ்கின்றனர். எனவே பெற்றோரும் பராமரிப்பாளர்களும் பிள்ளைகள் நாட்டின் பெறுமதியான பிரசைகளாக வளர்வதற்கு அவர்களுக்கு உதவுவதற்காக பிள்ளைகளின் சமூகத் திறன்களின் விருத்திக்கும் மனவெழுச்சி நிலைப்பாட்டிற்கும் பொருத்தமான சூழலை வழங்க வேண்டும்.

சுபத்திரா ராமய முன்பள்ளியின் பொறுப்பளார் கல்முனை சுபத்திரா ராமய விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகள சங்கரத்ன தேரர், ஆசிரியர் குழாம்,பெற்றோர்கள், மாணவர்கள் என பல்லின சமூகமும் பங்குகொள்ளும் முயற்சியாகவே இப்பாலர் பாடசாலை அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் நீடித்து நிலைக்கும் சமாதானத்துக்கு இதுபோன்று இன்னும் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.   

(ஏ. மொஹமட் பாயிஸ்)


Add new comment

Or log in with...