3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி: பாஜக படுதோல்வி | தினகரன்

3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி: பாஜக படுதோல்வி

இந்தியாவில் நடைபெற்ற ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜக எந்த மாநிலத்திலும் வெற்றி பெறவில்லை.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சந்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சந்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

மிசோரம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. மிஜோ தேசிய முன்னணி (எம்என்எப்) ஆட்சி அமைக்க உள்ளது. மிசோரமில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 110 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 111 தொகுதிகளிலும் ஏனைய வேட்பாளர்கள் 09 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 74 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 98 தொகுதிகளிலும் ஏனைய வேட்பாளர்கள் 27 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சந்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 67 தொகுதிகளிலும் ஏனைய வேட்பாளர்கள் 06 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 இடங்களில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். ஏனைய வேட்பாளர்கள் 08 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 இடங்களில் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி வேட்பாளர்கள் 87 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 19 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர் ஒரு தொகுதியிலும்

தெலுங்கு தேசம் 2 தொகுதிகளிலும் ஏனைய வேட்பாளர்கள் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சந்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அந்தந்த மையங்களில் நேற்று காலை 8:00 மணிக்கு தொடங்கியது.

சந்தீஸ்கர் சட்டப்பேரவையில் உள்ள 90 இடங்களுக்கு கடந்த நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய திகதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசம், 40 இடங்களைக் கொண்ட மிசோரம் ஆகிய சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 28-ல் தேர்தல் நடந்தது. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மற்றும் 119 இடங்களைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் திகதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தானில் ஒரு வேட்பாளர் இறந்ததால் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற 678 இடங்களுக்காக சுமார் 8,700 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 2,907 பேர் களம் இறங்கினர். மொத்தம் 1,74,724 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் அதிக பட்சமாக மத்திய பிரதேசத்தில் 65,367 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குகள் பதிவு செய்யப்பட்டு முத்திரையிடப்பட்ட (சீல்) இயந்திரங்கள் 5 மாநிலங்களில் உள்ள 670-க்கும் மேற்பட்ட மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. இதையடுத்து அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு மெகா கூட்டணி அமைக்க முயன்று வருகின்றன.

மக்களவைக்கு முன்னோட்டம்

எனவே மக்களவைத் தேர்தலுக்கு இந்தத் தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக தேர்தல் நடைபெற்ற 5-ல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்றது.

அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கும் இது மிக முக்கியமான தேர்தல் ஆகும். கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த பெரும்பாலான சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. வடகிழக்கு மாநிலங்களில் மிசோரம் மாநிலத்தில் மட்டும் இப்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ், அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது. பாஜக ஆளும் 3 மாநிலங்கள் மற்றும் டிஆர்எஸ் ஆளும் தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றும் முனைப்புடன் இருந்தது.


Add new comment

Or log in with...