இடைக்கால தடை மக்களிடையே தவறான கருத்தை ஏற்படுத்தியுள்ளது | தினகரன்

இடைக்கால தடை மக்களிடையே தவறான கருத்தை ஏற்படுத்தியுள்ளது

பிரதமரின் அலுவலக செயற்பாடுகளுக்கு இடைக்கால தடையுத்தரவொன்றை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவு நாட்டு மக்களிடையே தவறான ஒரு கருத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியியின் தலைவர் ஜீ. எல். பீரிஸ் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி இடைக்காலத் த​ைட உத்தரவை வழங்கிய தையடுத்து

நாட்டில் தற்போது பிரதமரோ அமைச்சரவையோ இல்லை என்று மக்கள் நினைக்கும் நிலை தோன்றியுள்ளது. ஆனால் அது அவ்வாறு அல்ல.

நீதிமன்றம் வெளியிட்ட இடைக்கால தடை உத்தரவின் மூலம் அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்த நீதிமன்றம் எதிர் பார்க்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவின்படி பிரதமரின் பதவி அப்படியே உள்ளது. ஆனால் அவரது செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு வெளியிடப்படும் வரை இந்த நிலை அமுலில் இருக்கும். ஒருநபர் எந்தவொரு நிலையிலும் இல்லாதிருந்தால் அவரது நிலையுடன் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளை எவரும் கட்டுப்படுத்த முடியாது என்று தற்போதைய நிலையை முன்னாள் அமைச்சர் பீரிஸ் விளக்கிக் கூறினார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி தொடர்ந்தும் இருக்கிறது. ஆனால் அவரது பதவிக்கு உரிய செயற்பாடுகளும் அதிகாரமும் மேற்படி இடைக்கால தடையுத்தரவு மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

அதேவேளை, பாராளுமன்ற கலைப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதிப்புடன் ஏற்றுக் கொள்வதாகவும் இப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையைப் போன்று இதற்கு முன் ஏற்பட்டதில்லை.

முதல் முறையாக இந்த நாட்டு மக்கள் இரண்டு பிரதமர்களையும் இரண்டு அமைச்சரவைகளையும் காண நேர்ந்துள்ளது. எனவே இப்போதைய அரசியல் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதைத் தவிர வேறுவழி இல்லை என்று அவர் மேலும் கூறினார்.


Add new comment

Or log in with...