நாமல் குமாரவின் தொலைபேசி ஹொங்கொங்கிற்கு | தினகரன்

நாமல் குமாரவின் தொலைபேசி ஹொங்கொங்கிற்கு

நாமல் குமாரவின் தொலைபேசி ஹொங்கொங்கிற்கு-Namal Kumara Mobile-CID Analyst to Hong Kong

நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியில் உள்ள அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகள் தொடர்பிலான தகவல்களை பெறுவதற்கு  CID மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் குழு ஒன்று ஹொங்கொங் சென்றுள்ளது.

நாமல் குமார என்பவரால் வழங்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக குறித்த முறைப்பாட்டாளரின் கையடக்க தொலைபேசியில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும்  ஒலிப்பதிவுகளை பரீட்சிப்பதற்காக இக்குழுவினர் ஹொங்கொங்கிற்கு சென்றுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் (CID) உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூவர் நேற்று (08) இரவு ஹொங்கொங் புறப்பட்டுள்ளனர்.

ஊழல் எதிர்ப்பு படை எனும் அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார என்பவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் இடம்பெறுவதாகவும் அது தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்து பொலிஸ் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில்  ஆதாரங்கள் அடங்கியதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப் பதிவுகள் நாமல் குமாரவின் தொலைபேசியில் காணப்படுவதாக  தெரிவிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த தொலைபேசியை CID யினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

அதற்கு அமைவாக குறித்த தொலைபேசியில் பல்வேறு ஒலிப்பதிவுகள் காணப்பட்டுள்ளதுடன் ஒரு சில ஒலிப்பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை பெறும் தொழில்நுட்பம் இலங்கையில் இல்லை என்பதன் காரணமாக, வெளிநாட்டிற்கு அதனை கொண்டு சென்று பரீட்சிப்பதற்கு அனுமதி வழங்குமாறு சிஐடி யினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இருவர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் 47 பேர் அடங்கலாக சுமார் 89 பேருக்கும் அதிகமானோர் விசாரணைக்குட்படுத்தப்பட்டதோடு, அதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை (05) இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணைக்கு அமைய, கைதான முன்னாள்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...