ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பெப்ரவரி 26 ஆம் திகதி ஆஜராகுமாறு உத்தரவு | தினகரன்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பெப்ரவரி 26 ஆம் திகதி ஆஜராகுமாறு உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உச்சநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை உருவாக்க சட்ட மாஅதிபர் எதிர்பார்த்திருப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சே ராஜரட்ணம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் ரஞ்சன் ராமநாயக்க எம்.பியால் உச்ச நீதிமன்றம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு அரசியலமைப்பின் 105ஆவது சரத்துக்கு முரணாக அமைந்துள்ளதால் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சே ராஜரட்ணம் தெரிவித்தார்.

நீதிபதி ஈவா வனசுந்தர மற்றும் நீதிபதி எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய இருவர் அடங்கிய நீதிபதிகள் குழாமே நேற்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டன. இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தனது மனுதாரருக்கு இன்னும் அழைப்பாணை கிடைக்கவில்லையென்றும் உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து உச்ச நீதிமன்றம் அவரை மீண்டும் பெப்ரவரி 26 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்தது.

உச்ச நீதிமன்றத்தில் முன்னெடுத்துச் செல்லப்படும் விசாரணை தொடர்பாக நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி ஊடகமொன்றில் தரக்குறைவான கருத்தை முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாகவே உச்ச நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதேவேளை நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி மீது தாக்கல் செய்யப்பட்ட இன்னுமொரு வழக்கு டிசம்பர் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...