பேருவளை ஹெரோயின் கடத்தல்; படகு உரிமையாளர் கைது | தினகரன்


பேருவளை ஹெரோயின் கடத்தல்; படகு உரிமையாளர் கைது

பேருவளை ஹெரோயின் கடத்தல்; படகு உரிமையாளர் கைது-231 Kg Drug Transported Troller Boat Owner Arrested

- ஹெரோயினுடன் கைதான சந்தேகநபரின் சகோதரர்

பேருவளை - பலபிட்டிய பிரதேசத்துக்கிடையில் கடலில் படகொன்றில் வைத்து 231.054 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பில், மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூபா 277.8 கோடி பெறுமதியான குறித்த ஹெரோயின் போதைப்பொருளை கடத்த பயன்படுத்திய ட்ரோலர் படகின் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பேருவளை ஹெரோயின் கடத்தல்; படகு உரிமையாளர் கைது-231 Kg Drug Transported Troller Boat Owner Arrested

இன்று (07) முற்பகல் 11.50 மணியளவில் எட்டியாந்தோட்டை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, எட்டியாந்தோட்டை, பஹல கராகொடை பிரதேசத்தில் வைத்து, ஹெரோயினை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்திய ட்ரோலர் படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்  44 வயதான பேருவளை, மொரகல்ல, கொடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த துலீப் சமந்த சில்வா என்பவராவார்.

சந்தேகநபரிடம் ரூபா 15 இலட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் அதனை  எட்டியாந்தோட்டையில் உள்ள  வங்கியிலுள்ள தனது கணக்கிலிருந்து எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர், 231 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரின் சகோதரர் என, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் (05) இரவு பேருவளை - பலபிட்டிய பிரதேசத்துக்கிடையில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பொலிஸ் போதை தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பேருவளையைச் சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் 231.054 கிலோ கிராம் போதைப் பொருளை ட்ரோலர் படகொன்றில் கடத்திச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்போதைப் பொருள் பாகிஸ்தானில் பொதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...