காலின் கீழ் தொலைபேசி; பரீட்சை எழுதிய மாணவன், உதவிய ஆசிரியர் கைது | தினகரன்

காலின் கீழ் தொலைபேசி; பரீட்சை எழுதிய மாணவன், உதவிய ஆசிரியர் கைது

காலின் கீழ் தொலைபேசி; பரீட்சை எழுதிய மாணவன் உதவிய ஆசிரியர் கைது-OL Student Answered Using Mobile and Teacher Arrested

பலாங்கொடையில் சம்பவம்

கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சையில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி விடை எழுதிய மாணவன் ஒருவரும் அவருக்கு வெளியில் இருந்து உதவிய ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவரே இவ்வாறு விடையளிக்கும்பொழுது  பலாங்கொடை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (06) இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின், ஆங்கிலப் பாடத்துக்கு தோற்றிய குறித்த மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொடை ஜெய்லானி தேசிய பாடசாலையின் மத்திய நிலையத்தில் பரிட்சை எழுதிய குறித்த மாணவன் வலயக்கல்வி பணிப்பாளர் கொடுத்த தகவலையடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவருக்கு உதவிய ஆசிரியரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரான மாணவனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படுத்ததை அடுத்து மத்திய நிலையத்தில் கடமையிலிருந்த அதிகாரிகள் இது விடயமாக மத்திய நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அந்த மாணவனை பரிசோதித்தபோது அவதது பாதங்களுக்குக் கீழ் கையடக்க தொலைபேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல் (SMS) மூலம் சந்தேகநபரான மாணவனுக்கு ஆங்கில பாடத்துக்கான கேள்விகளுக்கு பதில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.

இது விடயமாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது தெரியவந்துள்ளதாவது பலாங்கொடை பிரதேசத்தில் தனிப்பட்ட வகுப்புகளை நடத்தும் ஒரு ஆசிரியர் ஒருவர் மூலம் கையடக்க தொலைபேசியின் ஊடாக குறுந்தகவல் மூலம் சந்தேகநபரான மாணவனின் கையடக்க தொலைபேசிக்கு விடைகள் அனுப்பப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான மாணவன் பரீட்சை நிலையத்திற்கு 20 நிமிடங்கள் தாமதித்து வந்ததாக பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சந்தரப்பத்திலேயே அவர் இவ்வாறு கையடக்க தொலைபேசியை மறைத்து வைத்து கொண்டுவந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகின்றது.

சந்தேகநபரான குறித்த ஆசிரியர், குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் சேவையாற்றுபவர் என்பதோடு, 20 வயதான குறித்த பரீட்சார்த்தி, நான்காவது முறையாக சாதாரண தர ஆங்கிலப் பாடம் தொடர்பில் இவ்வாறு பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இருவருக்கும் பிணை
கைது செய்யப்பட்ட மாணவனும் அவருக்கு வெளியில் இருந்து உதவிய ஆசிரியர் ஆகிய இருவரும், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இரு சந்தேகநபர்களும், இன்றைய தினம் (07) பலாங்கொடை நீதவான் துமிந்த முதுன்கொட்டுவ முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ரூபா 2 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்க்கது.

(பலாங்கொடை தினகரன் நிருபர் - அப்துல் சலாம்)


Add new comment

Or log in with...