இடைக்கால தடை நீடிப்பு; நாளை விசாரணை தொடரும் | தினகரன்

இடைக்கால தடை நீடிப்பு; நாளை விசாரணை தொடரும்

இடைக்கால தடை நீடிப்பு; நாளை விசாரணை தொடரும்-Parliament Dissolving Interim Order Extended Till Dec 08

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை செயல்படுத்துவது தொடர்பான இடைக்கால தடை, டிசம்பர் 08 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 04 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக இடம்பெற்றுவந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் (06) பிரதம நீதியரசர் நலின் பெரேரா உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட நீதவான் முன்னிலையில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை (07) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 10 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த நவம்பர் 09 ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அதற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து பத்துக்கும் மேற்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

அதற்கமைய குறித்த வழக்கு விசாரணை கடந்த நவம்பர் 12 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துடன்,  குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இம்மாதம் 07 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதிப்பதாக நவம்பர் 13 ஆம் திகதி இடம்பெற்ற விசாரணைகளை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைவாக இன்றையதினம் (06) குறித்த இடைக்கால தடையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நாளை மறுதினம் வரை (08) நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...