கட்சி மாநாட்டை உடன் கூட்டுமாறு ஐ.தே.க முக்கியஸ்தர்கள் வேண்டுகோள் | தினகரன்

கட்சி மாநாட்டை உடன் கூட்டுமாறு ஐ.தே.க முக்கியஸ்தர்கள் வேண்டுகோள்

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளரை தெரிவுசெய்வது தொடர்பில் உடனடியாக கட்சி மாநாட்டை கூட்டுமாறு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பலரும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

ஐ.தே.கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியின் 24 மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் 43 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டாக இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளனர்.

நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காகவும் கட்சியின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க :

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் எப்போதும் கேட்பது அமைதியான ஆட்சியையே.அது தொடர்பாக பேசிக்கொண்டிருக்காமல் அமைதியான ஆட்சியை உருவாக்குவதற்கான காலம் கனிந்துள்ளது என நான் நம்புகிறேன்.

கட்சிக்குள் ஜனநாயகம் இன்றி நாட்டின் ஜனநாயகம் பற்றி பேசமுடியாது. ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் அக்கட்சியினர் ரணிலை விடுத்து மாற்று வழியொன்றை சிந்திக்க வேண்டும். யாரைப் பிரதமராக்கலாம் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.

முன்னாள் பிரதியமைச்சர் எம்.டி. பிரேமரத்ன :

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக்கப்படவேண்டும். என்பதை நாம் முன்பிருந்தே கூறிவந்துள்ளோம்.

ரணில் விக்கிரமசிங்க தலைவராக தொடர்ந்துமிருந்தால் கட்சி வீழ்ச்சியையே எதிர்நோக்கும் இப்போதும் அது இடம்பெற்றுவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியில் முன்பிருந்த ஜனநாயகத்தை அவர் முற்றாக அழித்துவிட்டார்.

டட்லி சேனநாயக்க கட்சியின் தலைவராக பதவி வகித்தபோது, பிரதி வருடமும் கட்சி மாநாட்டை கூட்டினார். கட்சி மாநாடு ஆரம்பித்ததும் டட்லி சேனநாயக்க தலைமை ஆசனத்திலிருந்து இறங்கி கீழேயுள்ள கதிரையில் அமர்வார். மீண்டும் தலைவர் தெரிவுசெய்யப்பட்ட பின்னரே அவர் அந்த ஆசனத்துக்கு செல்வார். தலைவர்கள் அதுபோன்று ஜனநாயக ரீதியில் செயற்படவேண்டும். அந்த நிலை இல்லாததால்தான் தற்போது கட்சி இந்தளவு வீழ்ச்சி கண்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் பெரேரா :

தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் எந்தவித ஜனநாயகமும் கிடையாது என்பதை நாட்டு மக்கள் தெளிவாக புரிந்துகொண்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ எந்தவித பிரயோசனமும் கிடையாது.

எல்லாக் காலத்திலும் அவரே தலைமைப்பதவி வகிக்கவேண்டுமென்பது மட்டுமே அவரது நோக்கமாகவுள்ளது. நாடு சீரழிந்துபோனாலும் தான் தலைமைப்பதவியில் இருக்கவேண்டுமென்பதே அவரது ஒரே நோக்கம்.

நாட்டில் இரண்டு கட்சிகள் இருக்கவேண்டுமென்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. எனினும் அந்தக் கட்சிகளின் எதிர்கால சந்ததியினர் உருவாகவேண்டும்.

ஒரே ஆள் தலைமைப் பதவியை பற்றிப் பிடித்துக்கொண்டிருந்தால் கட்சி சீரழிந்துவிடும். சஜித் பிரேமதாச தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டால், தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும்.

முன்னாள் அமைச்சர் உபாலி சோமசிறி :

ஐக்கிய தேசியக் கட்சியில் மாநாடொன்று நடத்தப்பட்டு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியதே இன்றுள்ள தேவையாகும். அதுவே ஜனநாயகமும் சரியான தீர்வுமாகும்.

நான் ரணில் விக்கிரமசிங்கவின் ஊரைச் சேர்ந்தவன். எமது ஊர் மக்கள்கூட தற்போது இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளனர். மேற்குலக நாடுகளுக்கு ஏற்ப செயற்படும் தலைவர் மாற்றப்பட வேண்டுமென்பது அவர்களது விருப்பமாகும். (ஸ)


Add new comment

Or log in with...