இந்தோனேசியாவின் பப்புவாவில் 24 தொழிலாளர் சுட்டுக் கொலை | தினகரன்


இந்தோனேசியாவின் பப்புவாவில் 24 தொழிலாளர் சுட்டுக் கொலை

இந்தோனேசியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 24 கட்டட தொழிலாளர்கள் பலியாகினர்.

இந்தப் படுகொலை சம்பவம் குறித்து விசாரணை செய்ய அனுப்பப்பட்ட படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். மலைகள் நிரம்பிய பகுதி ஒன்றில் பணியாளர்கள் வீதி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகளே இதற்கு காரணம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சுதந்திர பப்புவாவிற்காக பல தசாப்தங்களாக அந்த பகுதியில் மக்கள் போராடி வருகின்றனர். தொழிலாளர்கள் அவர்கள் கட்டிக்கொண்டிருந்த பாலத்தின் மேல் அவர்களின் உடல்கள் காணப்பட்டுள்ளன. இதனை அடுத்து பொலிஸார் மற்றும் துருப்புகள் கடந்த திங்கட்கிழமை அந்த பகுதிக்கு விரைந்த நிலையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையிலேயே இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய தங்கம் மற்றும் பித்தலை சுரங்கங்கள் இருக்கும் இடங்களில் ஒன்றாக பப்புவா இருந்தபோதும் இந்தோனேசியாவின் வறிய மாகாணங்களில் ஒன்றாக அது இருந்து வருகிறது.


Add new comment

Or log in with...