அமெரிக்காவுடனான உடன்பாட்டை அமுல்படுத்துவதற்கு சீனா உறுதி | தினகரன்

அமெரிக்காவுடனான உடன்பாட்டை அமுல்படுத்துவதற்கு சீனா உறுதி

அமெரிக்காவுடன் எட்டப்பட்ட வர்த்தக உடன்பாடுகளை கூடிய விரைவில் அமுல்படுத்த முடியும் என சீன அதிகாரிகள் உறுதி அளித்துள்ளர். எனினும் அதனை அமுல்படுத்துவது எவ்வாறு என்பது பற்றி எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.

சீனா மற்றும் அமெரிக்கா இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றைய நாட்டின் பொருட்கள் மீது பில்லியன் டொலர்கள் வரிகளை விதித்ததால் அது ஒரு வர்த்தகப் போராக மாறியுள்ளது.

எனினும் ஆர்ஜன்டீனாவில் வார இறுதியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த வர்த்தகப் போரை இடைநிறுத்த இணங்கியுள்ளனர்.

எனினும் இரு தரப்பிடமும் இருந்து முரணான செய்திகள் வெளியாகும் நிலையில் இந்த உடன்பாடு பற்றி அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் பதிலுக்கு பதில் நடவடிக்கையாக முன்னெடுத்து வந்த இந்த வரி விதிப்புகளை 90 நாட்டுகளுக்கு இடை நிறுத்த இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டது. இது இந்த வர்த்தகப் போர் தீவிரமடைவதை தணிப்பதாக பார்க்கப்பட்டது.

இதன்போது வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் 20,000 கோடி டொலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவையும் அமெரிக்கா கைவிட்டது.

அமெரிக்காவிடமிருந்து வேளாண்மை, தொழிற்துறை மற்றும் எரிசக்திப் பொருட்களை கணிசமான அளவில் இறக்குமதி செய்ய சீனா ஒப்புக் கொண்டது.

சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே நியாயமற்ற அளவில் வர்த்தகப் பற்றாக்குறை நிலவி வருவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

மேலும், அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களைத் திருடி சீனா பயன்படுத்தி வருவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

தற்போது அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டிருப்பதன் அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரு நாடுகளின் அமைச்சர்களும் உயரதிகாரிகளும் சந்தித்து வர்த்தக உறவில் ஏற்பட்ட சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சுமுகமாகத் தீர்க்கப் பேச்சு நடத்துவார்கள். அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதும், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சீன அரசு அளிக்கும் மானிய உதவி உள்ளிட்ட பணப் பயன்களும் விவாதிக்கப்படும்.


Add new comment

Or log in with...