இலங்கையின் முதற்தர போட்டியில் சிம்பாப்வே வீரர் தைபு | தினகரன்


இலங்கையின் முதற்தர போட்டியில் சிம்பாப்வே வீரர் தைபு

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான டடெண்டா தைபு, இலங்கையின் முதற்தர கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டால் தற்போது நடத்தப்பட்டு வருகின்ற மூன்று நாட்கள் கொண்ட கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து அவர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

35 வயதுடைய விக்கெட் காப்பாளரான தைபு, 2004ஆம் ஆண்டு தனது 21ஆவது வயதில் சிம்பாப்வே அணியின் தலைவராகச் செயற்பட்டு உலக கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற அவர், இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்மீக செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.

சிம்பாப்வே அணிக்காக 28 போட்டிகளிலும், 150 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள தைபு, 17 ரி -20 சர்வதேசப் போட்டிகளிலும் அவ்வணிக்காக விளையாடியுள்ளார்.

தொழில்முறை கிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பித்து பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து கொள்வதற்கு தனது மகன் முக்கிய காரணமாக இருந்ததாக டடெண்டா தைபு தெரிவித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்ற தைபு இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், ”என்னுடைய வாழ்க்கையில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் உணர்வுகளுக்கு கட்டுபட்டோ அல்லது திட்டங்களை மேற்கொண்டோ எடுக்கப்படவில்லை. ஆனால், எனது உள் மனம் தான் எனக்கான வழிகாட்டலை வழங்கிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிகின்றது. எனவே அதை ஒருபோதும் என்னால் புறக்கணிக்க முடியாது என்றார்.

நான் எவ்வாறு கிரிக்கெட் வினையாட்டுக்கு வந்தேன் என எனது மகன் டெடெண்டா அடிக்கடி கேட்பார். அவருக்கு தற்போது கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உண்டு. நான் விளையாடிய காலத்தில் அவர் சிறு பிள்ளையாக இருந்ததால் என்னுடைய போட்டிகளை அவரால் பார்க்க முடியாமல் போனது. எனினும், தற்போது மிகச் சிறந்த உடற் தகுதியுடன் உள்ளேன். எனக்கு இன்னும் கிரிக்கெட் விளையாட முடியும் என்பதை உணருகிறேன். எனவே, இனிவரும் காலங்களில் நான் விளையாவதை பார்க்கும் சந்தர்ப்பம் எனது மகனுக்கு கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

தொழில்முறை கிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பித்து பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து கொள்வதற்கு தனது மகன் முக்கிய காரணமாக இருந்ததாக டடெண்டா தைபு தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...