அம்மு முதல் அம்மா வரை... | தினகரன்


அம்மு முதல் அம்மா வரை...

ஜெயலலிதாவின் இரண்டாம் நினைவுநாள் நேற்றாகும். அவர் மரணமடையும் போது 68 வயது. (1948-_2016)

'அம்மா' என்று அ.தி.மு.க தொண்டர்களால் அழைக்கப்படும் ஜெயலலிதா, 1948ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 24ம் திகதி மாண்டியா மாவட்டத்தில் உள்ள மெலுகோடேவில் பிறந்தார். அப்போது அந்த பகுதி மைசூர் மாகாணத்தில் இருந்தது.

அவருடைய பாட்டியின் பெயரான 'கோமலவல்லி' என்ற பெயர் முதலில் சூட்டப்பட்டது. அவருடைய ஒரு வயதில் அவருக்கு ஜெயலலிதா என்ற பெயரும் சூட்டப்பட்டது. மைசூரில் ஜெயலலிதா குடும்பத்தினர் இரண்டு வீடுகளில் தங்கி இருந்தனர். ஒரு வீட்டின் பெயர் 'ஜெயவிலாஸ்' மற்றொரு வீட்டின் பெயர் 'லலிதா விலாஸ்'. இதனை சேர்த்துதான் ஜெயலலிதா என்று பெயர் சூட்டினர்.

ஜெயலலிதா புனித வளனார் பாடசாலையில் படித்தார். பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் இடம்பிடித்தார்.அவர் சரளமாக தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளைப் பேசுவார்.

நான்கு வயதில் ஜெயலலிதா கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார். மே மாதம் 1960ஆம் ஆண்டு, மைலாப்பூர் ரசிக ரஞ்சினி சபாவில் அவரது நடன அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த அரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவாஜி கணேசன் பங்கேற்றார். ஜெயலலிதாவின் நடனத்தைப் பார்த்து வியந்த சிவாஜி, ஜெயலலிதாவுக்கு திரைப்படத்துறையில் நல்ல எதிர்காலம் இருப்பதாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவிடம் கூறினார். ஆனால், அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நடனம் மட்டுமல்ல இசையிலும் தேர்ச்சி பெற்றவர் ஜெயலலிதா. சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய இசை தெரியும். பியானோ வாசிக்கவும் பயின்றிருக்கிறார்.

தொடக்கத்தில் ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், திரைப்படத்துறை அவரை விடுவதாக இல்லை. ஆம், ஒரு முறை சந்தியா தன்னுடன் ஜெயலலிதாவை திரைப்படத் தளத்துக்கு அழைத்துச் சென்றபோது இறைவி பார்வதியின் சிறு வயது வேடத்தில் நடிக்க நேரிட்டது.

ஜெயலலிதா தன்னுடைய 15 வயதில் கன்னடப் படமான 'சின்னட கொம்பே' திரைப்படத்தில் அறிமுகமானார். அவருக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும், கல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என பல சமயங்களில் பல கனவுகள் இருந்திருக்கின்றன.

ஜெயலலிதா பிரெஞ்சுப் பெண்ணாக வேடமேற்று நடித்த ஓர் ஆங்கில நாடகத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் சோ.அவர் 1965-_ - 1980 இடையேயான காலகட்டத்தில் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார்.

இந்த காலகட்டத்தில்தான் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட திடைப்படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலான படங்கள் நூறு நாட்களுக்கும் மேலாக ஓடின. தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1972ஆம் ஆண்டு பெற்றார். அவர் தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு சம்பளமாக பெற்ற தொகை ரூபாய் மூவாயிரம்.

அரசியலில் தனக்கு சிறு வயது முதலே ஆர்வம் இருந்ததாக பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.ஜெயலலிதா அசாத்திய தைரியம் கொண்டவர் என்பதற்கு உதாராணம், திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய காலத்தில் அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில் "என் பூர்வீகம் தமிழகம். நான் தமிழச்சி" என்றார். இந்தப் பேட்டி சில தீவிர கன்னட அமைப்புகளை கோபமடைய செய்தது. ஜெயலலிதா கர்நாடகாவுக்கு படப்பிடிப்புக்கு வரும்போது நூற்றுக்கணக்கானோர் அவரை முற்றுகை இட்டு அந்தப் பேட்டிக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்கள். ஆனால், ஜெயலலிதா மறுத்து விட்டார். "நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் தமிழச்சிதான்" என்று கூறினார்.

அரசியலில் உச்சம் தொட்டப்பின் அவரை 'அம்மா' என்று அனைவரும் அழைத்தாலும், இறுதிவரை அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை 'அம்மு' என்றே அழைத்தனர்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 1982ம் ஆண்டு இணைந்தார் ஜெயலலிதா.அ.தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராக 1983ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

உள்ளூர் அரசியல் மட்டுமல்ல, உலக அரசியல் நி​ைலவரங்களையும் தொடக்கம் முதலே கூர்ந்து கவனித்தவர் ஜெயலலிதா. "ஜெயலலிதாவிடம் அயர்லாந்து தேர்தல் பற்றியும் உரையாடலாம். மாசேதுங் பற்றியும் விவாதிக்கலாம்" எனறார், 1970-களில் ஜெயலலிதாவை அதிகமுறை பேட்டி கண்ட திரைஞானி.

ராஜ்ய சபா உறுப்பினராக 1984இல் தேர்வானார் ஜெயலலிதா.ராஜ்ய சபாவில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 185. இதே இருக்கைதான் சி.என். அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 1963 காலகட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்டது.

எங்கு இருந்தாலும் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியவர் ஜெயலலிதா. ராஜ்ய சபாவில் அவருடைய கன்னிப் பேச்சு அனைவரையும் ஈர்த்தது. சக உறுப்பினரான குஷ்வந்த் சிங், 'அறிவுடைய அழகான பெண்' என்று ஜெயலலிதாவை புகழ்ந்தார். பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் ஜெயலலிதாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டார்.

எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் அவமானப்படுத்தப்பட்டார் ஜெயலலிதா. அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. ஓர் அணிக்கு ஜெயலலிதா தலைவராகவும், இன்னொரு அணிக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைவராகவும் செயல்பட்டனர்.

ஜானகி சிறிது காலம் தமிழக முதல்வராக இருந்தார். ஆனால், மூன்று வாரங்களில் ஆட்சி கலைக்கப்பட்டது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டை புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்.

ஜெயலலிதா அணி 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி அணி 2 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்தது. பின், ஜானகி அணி ஜெயலலிதா அணியுடன் இணைந்தது. இரட்டை இலை சின்னமும் மீண்டும் கிடைத்தது.

1991_ -1996 ஆட்சிக் காலத்தின் போது ஜெயலலிதா ஈட்டிய சொத்துகளுக்காக பின்னர் சிறைத் தண்டனை அனுபவித்தார். இந்த வழக்கில்தான் இப்போது சசிகலா சிறையில் இருக்கிறார்.

ஜெயலலிதாவின் பெயர் 'கின்னஸ் புக் ஒஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில்' இடம்பிடித்திருக்கிறது. ஆம், 1995-ஆம் ஆண்டு தன்னுடைய வளர்ப்பு மகனுக்கு மிக பிரம்மாண்டமாக 1.5 இலட்சம் பேரை அழைத்து திருமணம் நடத்தினார். இதுதான் கின்னஸில் இடம்பிடித்தது.

2016- ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் அ.தி.மு.கவே மீண்டும் வென்றது. ஜெயலலிதா முதல்வர் ஆனார். அவர் நன்கு எழுதக் கூடியவரும் கூட. தாய் இதழில் தொடர் எழுதி இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை தொடங்கியபோது அதற்கு அதிக நிதி அளித்தவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர். நிதி அளித்ததோடு மட்டுமல்லாமல் சத்துணவு கூடங்களை அவ்வப்போது பார்வையிட்டார்.

"இந்த உலகத்தின், மிகவும் கடினமான வேலை எனக்குப் பணிக்கப்பட்டாலும், நான் அதற்கு என்னைத் தயார் செய்து கொள்வேன்." - இது ஜெயலலிதா அடிக்கடி தம் நண்பர்களிடம் சொல்லும் வரிகள்.

சிறு வயது முதலே அன்பிற்காக மிகவும் ஏங்கி இருக்கிறார் ஜெயலலிதா. ஒரு பேட்டியில் ஜெயலலிதா, "நான் இதுவரை நிபந்தனையற்ற அன்பை உணர்ந்ததே இல்லை. கதைகளில், இலக்கியங்களில், திரைப்படங்களில் வேண்டுமானால் அத்தகைய நிபந்தனையற்ற அன்பு இருக்கலாம். ஆனால், அத்தகைய அன்பு நிஜவாழ்க்கையில் இருப்பதாக நான் கருதவில்லை" என்று கூறியுள்ளார்.

அதிமுகவின் நிறுவனத் தலைவரான எம்ஜிஆர் 'புரட்சித் தலைவர்' என்றே அவரது கட்சியின் தொண்டர்களால் அழைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கட்சியை வழிநடத்தியவரும் , கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை 'புரட்சித் தலைவி' என்ற அழைக்க ஆரம்பித்தனர்.

'தங்க தாரகை' , 'ஜான்சி ராணி' - இவையெல்லாம் அதிமுகவினரும், அவரின் நலன் விரும்பிகளும் ஜெயலலிதாவுக்கு அளித்த பட்டங்களாகும்.

பின் வந்த ஆண்டுகளில், ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவரின் செயல்பாடுகளால், அவரது கட்சியினர் மற்றும் பிற கட்சியினர், சமூக இயக்கத்தினர் 'சமூக நீதி காத்த வீராங்கனை' , 'காவிரி தந்த கலைச்செல்வி' என்று பல அடைமொழிகளை வழங்கினர்.

ஆனால், இவற்றை எல்லாம் விட அவருக்கு நிலைத்து நின்ற அடைமொழி அல்லது பெயர் 'அம்மா' என்பது மட்டுமே. ஆரம்பத்தில் அதிமுகவினரால் மட்டும் 'அம்மா' என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா, பிற்காலங்களில் கூட்டணிக் கட்சிகள், மாற்றுக் கட்சியினர், திரையுலகினர் என்று பலராலும் அவ்வாறே அழைக்கப்பட்டார்.

'அம்மா' என்பது ஜெயலலிதாவின் சொந்தப் பெயர் போல பலரின் மனதில் தங்கிவிட்டது.

பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவியில் இனி ஆளுநருக்குப் பதிலாக முதல்வரே இருப்பார் என்பதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முயற்சி செய்தார். அந்த அளவுக்கு ஆளுநர் விவகாரத்தில் போர்க்குணத்துடன் செயல்பட்டவர் ஜெயலலிதா. ஆனால் அவருடைய வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் அ.தி.மு.க அரசு ஆளுநருக்குத் துளியளவு எதிர்ப்பையும் காட்டவில்லை.


Add new comment

Or log in with...