தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கான காலம் இதுவல்ல | தினகரன்


தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கான காலம் இதுவல்ல

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வுகோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தும் காலம் இதுவல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 1,000 ரூபா சம்பள அதிகரிப்பைக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வேலைநிறுத்தம் மேற்கொள்வதற்கான காலம் இதுவல்ல. தமது அரசியல் இலாபத்துக்காக அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களை சிலர் வீதியில் இறக்கிவிட்டுள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பெருந்தோட்டத்துறையினரின் சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவிருந்த நிலையிலேயே அரசியல் குழப்பம் ஏற்பட்டது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவேண்டியவர்கள் தம்மை அரசாங்கத்தின் பங்காளிகளாக்கிக் கொண்டனர். பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே வீதியில் இறக்கி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எமது மக்களுக்கு 1,000 ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுத் தரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம். மக்களுடன் சேர்ந்து போராட நாம் தயாராகிவிருக்கின்றோம். இதற்கான பேரரணியை ஆரம்பித்து அழுத்தம் கொண்டுத்துள்ளோம்.

இவ்வாறான நிலையில் பிரதமர் அமைச்சரவை இல்லாத நிலையில் மக்களை வீதிக்கு இறக்குவதால் யாருக்கு அழுத்தம் கொடுக்க முடியும்? தமது சிறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்களை வீதியில் இறக்கி பலிக்கடாவாக்க முயற்சிக்க வேண்டாம். மக்களைப் பிழையான பாதையில் வழிநடத்த வேண்டாம். 2005ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் ஏன் அக்காலப் பகுதியில் 1,000 ரூபா சம்பளத்தை பெருந்தோட்டத்துறையினருக்குப் பெற்றுக் கொடுக்கவில்லையென்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

ஷம்ஷ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...