ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் அடிப்படை உரிமையை மீறவில்லை | தினகரன்


ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் அடிப்படை உரிமையை மீறவில்லை

*13 மனுக்களையும் நிராகரிக்குமாறு சட்ட மாஅதிபர் உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அடிப்படை உரிமையை மீறவில்லை என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கு உட்பட்டதே என்றும் சட்ட மாஅதிபர் ஜயந்த ஜயசூரிய நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை செல்லுபடியற்றதாக்கும்படி சட்ட மாஅதிபர் நேற்று பிரதம நீதியரசர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்படி நடவடிக்கையினால் மேற்படி மனுதாரர்களினதோ அல்லது நாட்டு மக்களினதோ அடிப்படை உரிமை மீறப்படவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி மட்டுமே செயற்பட்டுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியிருக்கவில்லை. மேற்படி செயற்பாடு தொடர்பில் அரசியலமைப்பின் 38(2) சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் இங்கு தெரிவித்துள்ளார்.

சிலவேளைகளில் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியிருந்தால் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு மட்டுமேயுள்ளது. அதனோடு சம்பந்தப்பட்ட யோசனையை சபாநாயகருக்கு சமர்ப்பித்து அதன்பின்னர் அதுதொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொள்ள முடியும். அதன்பின்னர் உச்ச நீதிமன்றத்தினால் மேற்படி விடயம் தொடர்பில் விசாரணை நடத்தமுடியும் என்றும் சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)


Add new comment

Or log in with...