சகல பிரச்சினைக்கும் ஒரு வாரத்தில் தீர்வு | தினகரன்


சகல பிரச்சினைக்கும் ஒரு வாரத்தில் தீர்வு

தீர்வைப் பெற்றுத்தருவதாக தமிழ் மக்களை ஏமாற்றியவர் ரணில்

* 13 இல் இருந்த அதிகாரங்களையும் பறித்தார்
* நாட்டை ஆள்வதற்கு ரணில் பொருத்தமே இல்லை

தமிழ் மக்களுக்குத் தீர்வினைப் பெற்றுக்ெகாடுப்பதாக வாக்குறுதியளித்து அவர்களை ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பதின்மூன்றாவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களையும் பறித்துக்ெகாண்டதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலைக்கு ஒரு வாரத்தில் தீர்வைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (04) தெரிவித்தார்.நாட்டின் அனைத்து நெருக்கடிகளுக்குமான தீர்வு ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதே என்றும் அந்தத் தீர்மானம் நேற்றும் இன்றும் நாளையும் பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எதிர்காலச் சந்ததிக்காகவும் அதனைத் தாம் மேற்கொள்வதாகத் தெரிவித்த அவர், நாட்டைப் பாதுகாப்பதற்கு சகல கட்சிகள், தரப்புகளையும் சமாதானக் கரம் நீட்டி அழைப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்குத் தாம் காரணம் அல்லவென்றும் ரணில் விக்கிரமசிங்கவே முழுக்காரணம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நெருக்கடியைத் தோற்றுவித்தவரும் ரணில் விக்கிரமசிங்க என்றும் ஜனாதிபதி கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் தமக்குத் தனிப்பட்ட ரீதியில் எந்தக் குரோதமும் கிடையாதென்றும் கட்சி, நிறத்துடன் பிரச்சினைகள் இல்லையென்றும் தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டை ஆள்வதற்கும் நாட்டின் நோக்கத்திற்கும் பொருத்தமானவர் அல்லர் என்றும் தெரிவித்தார். நாடு, மக்களின் பாரம்பரியம், கலாசாரம், சம்பிரதாயம், பௌத்தம் உட்பட அனைத்து மதங்களின் சிந்தனைகள் ஆகியவற்றுக்கும் பொருத்தமற்றவர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறிய ஜனாதிபதி, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களுடன் நேற்று முன்தினம் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறினார். எனினும், பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களது கையெழுத்தைக் கொண்டு வந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் இந்நாட்டின் பிரதமராக்கப்போவதில்லை என அவர்களிடம் உறுதியாகத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

"நாட்டில் அரசியல் போராட்டம் ஒன்று கிடையாது. அரசியல் நெருக்கடியே உள்ளது. அந்த நெருக்கடி உருவாகுவதற்குக் காரணம் ரணில் விக்கிரமசிங்கவே. 2015ஆம்ஆண்டில் எமக்கு வாக்களித்த 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். 2014இல் நவம்பரில் நான் எடுத்த தீர்மானமும் கடந்த ஒக்ேடாபரில் நான் எடுத்த தீர்மானமும் மிகச் சரியானவையே. அரசியல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாட்டுக்குத் தேவையான தீர்வே அது.

நாட்டின் ஊழல் மோசடிக்கு எதிராகவும் திருட்டுக்கு எதிராகவும் நாட்டின் வளங்களை பாதுகாப்பதற்காகவும் நான் மேற்கொண்ட அரசியல் தீர்வு அது.

ரணில் விக்கிரமசிங்க நாட்டையும் நாட்டு மக்களையும் சீரழித்தார். அத்துடன் என்னையும் சீரழித்தார். எனினும், அவற்றைப் பொறுத்துக்கொண்டு 3 வருடங்கள் மௌனமாக நான் அரசியலில் பயணித்தேன். முன்பு ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியே வர மௌனம் காத்தது போல் இந்த வேளையிலும் மௌனம் காக்க நேரிட்டது.

மஹிந்த ராஜபக்ஷவை நான் பிரதமராக நியமித்தமை அவசரமாக எடுத்த முடிவல்ல. ரணில் விக்கிரமசிங்க நாட்டையும் அழித்து அவரது கட்சியையும் அழித்து நல்லாட்சி அரசாங்கத்தை அழித்து என்னையும் அழித்தார் என்பதே உண்மை. இதற்கான ஒரே தீர்வு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து விரட்டுவதே. அந்தச் சரியான தீர்மானத்தையே நான் எடுத்தேன்.

அவர் கொண்டு வந்த பல சட்டமூலங்களை நான் நிராகரித்தேன். அவர் அடிப்படை வாதங்களை உபயோகித்தார். நாட்டு மக்களை ஏமாற்றினார். அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதாக வடக்கு மக்களையும் ஏமாற்றினார். தீர்வு பெற்றுக்கொடுப்பதில் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்தார். இந்த நிலையிலேயே நாட்டிற்கு பொருத்தமான சில தீர்மானங்களையும் வேலைத் திட்டங்களையும் மேற்கொள்ள நான் நடவடிக்கை எடுத்தேன்.

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி புதிய அனுபவம் ஒன்றல்ல. இதுபோன்று பல்வேறு நாடுகளிலும் நெருக்கடிகள், பாராளுமன்றத்தில் குழப்பங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஜெர்மனியில் ஆறு மாதம் அரசாங்கம் இருக்கவில்லை. இத்தாலியில் ஐந்து வாரம் அரசாங்கம் செயற்படவில்லை. அவுஸ்திரேலியாவில் பிரதமர் மாற்றம் அடைந்ததுடன் பாராளுமன்றம் செயற்படவில்லை. இத்தகைய அரசியல் நெருக்கடிகள் அரசியலில் புதியதொன்றல்ல. எவ்வாறெனினும் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயற்பாடுகளை எந்தக் கட்சி பாரபட்சமுமின்றி நான் நிராகரிக்கின்றேன்.

கடந்த மூன்று வாரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் இடம்பெறுகின்றன. இறுதித் தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இடைக்கால தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளது. இது கொலை தொடர்பான வழக்கோ கொள்ளை தொடர்பான வழக்கோ பாலியல் துஷ்பிரயோக வழக்கோ கிடையாது. இஃது அரசியல் வழக்கு.

மக்கள் மத்தியில் இது தொடர்பில பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுகின்றன. எனினும் நான் நீதிமன்றத்தை மதிக்கின்றேன். அதன் தீர்ப்புகளை கௌரவமாக ஏற்றுக்கொள்வேன், என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...