மீண்டும் கிரிக்கெட்டுக்குள் டைபு; இலங்கையில் வாய்ப்பு | தினகரன்


மீண்டும் கிரிக்கெட்டுக்குள் டைபு; இலங்கையில் வாய்ப்பு

மீண்டும் கிரிக்கெட்டுக்குள் டைபு; இலங்கையில் வாய்ப்பு-Tatenda Taibu Back to the Cricket in Sri Lanka

பதுரெலிய கழகத்திற்கு ஒப்பந்தம்

சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவரும் அண்ணியின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருந்த டடெண்டா டைபு இலங்கையின் முன்னணி கிரிக்கட் கழகங்களில் ஒன்றான பதுரெலிய கிரிக்கெட் கழகத்திற்கு விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான டைபு 2001 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் அதே அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான டைபு, 2007 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியின் மூலம் சர்வதேச ரி20 போட்டிகளில் அறிமுகமானார்.

விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான டைபு இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,546 ஓட்டங்களையும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,393 ஓட்டங்களையும் 16 ரி20 போட்டிகளில் விளையாடி 254 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது 21 வயதில் சிம்பாப்வே அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் மிகக்குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைவராக செயற்பட்ட பெருமையை டைபு பெற்றார்.

2012 ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற டைபு அதன் பின்னர் சிம்பாப்வே அணியின் தேர்வுக்குழுத் தலைவராக செயற்பட்டார்.

ஐக்கிய அரபு இராச்சிய அணியுடன் இடம்பெற்ற போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து தேர்வுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.

தற்பொழுது லண்டனில் வாழ்ந்து வரும் டைபு தன் மகனுக்காகவே மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

"எனது மகனுக்கு தற்பொழுது கிரிக்கெட் விளையாட்டின் மீது விருப்பம் ஏற்பட்டுள்ளது. நான் விளையாடும் காலங்களில் அவர் மிக சிறியவர் எனது விளையாட்டினை கண்டிராத அவர் என்னிடம் எப்படி கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானீர்கள், எப்படி விளையாடினீர்கள் என்ற கேள்விகளெல்லாம் வினவினார். அதனாலேயே அவருக்காக மீண்டும் விளையாட ஆரம்பிக்கின்றேன்."

"என்னிடம் விளையாடுவதற்கு அவசியமான தேக வலு உள்ளது. அதன் காரணமாகவே இலங்கையின் பதுரெலிய கிரிக்கெட் கழகம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வெளிநாட்டு வீரர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பத்தை பார்த்தேன் அதனையடுத்தே அதற்காக விண்ணப்பித்தேன். அக்கழகத்துடன் இணைந்து விளையாடுவதற்கு ஆவலுடன் இருக்கிறேன்” என தெரிவித்தார்.

தற்போது இடம்பெற்றுவரும் கழக மட்ட 3 நாள் டெஸ்ட் போட்டிகளில் பதுரெலிய அணிக்காக விளையாடவுள்ள டைபு, அது தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...