வவுணதீவு பொலிஸார் படுகொலை; மேலும் ஒருவர் கைது | தினகரன்


வவுணதீவு பொலிஸார் படுகொலை; மேலும் ஒருவர் கைது

வவுணதீவு பொலிஸார் படுகொலை; மேலும் ஒருவர் கைது-Police Shooting Vavunathivu Batticaloa-Ex LTTE Arrested at Kannankuda

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் பொலிசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் குறித்த சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (03) பிற்பகல் 4.30 மணியளவில், குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மட்டக்களப்பு, கன்னங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த, கண்ணன் என அழைக்கப்படும் கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் (40) என்பர் என அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர், விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவு தலைவர்களில் ஒருவர் எனவும், LTTE புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டு அம்மானுக்கு அடுத்தபடியாக செயறப்பட்டவர் எனவும், விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், சம்பவம் இடம்பெற்ற தினத்தில் (30) மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தலைவர் ஒருவரும், கடந்த சனிக்கிழமை (01) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வட்டக்கச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் சரணடைந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டதற்கமைய இதுவரை 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...