எழுத்து மூல ஒப்பந்தம் இன்றி ஆதரவு வழங்கக் கூடாது | தினகரன்


எழுத்து மூல ஒப்பந்தம் இன்றி ஆதரவு வழங்கக் கூடாது

எழுத்து மூல ஒப்பந்தம் இன்றி ஆதரவு வழங்கக் கூடாது-சிவாஜிலிங்கம்-Must Have Written Promise to Support UNF-Sivajilingam

எழுத்து மூல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளாது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க கூடாது என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோ வலியுறுத்தி உள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (05) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்    சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

கொழும்பில் நேற்று (04) மாலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கூட்டமைப்பின் பங்காளி கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதில் நிபந்தனைகள் இன்றி ஆதரவு வழங்க கூடாது என கோரினோம். சிங்கள கட்சிகள், ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி என்பார்கள் பின்னர் ஏமாற்றி விடுவார்கள் இதுதான் காலம் காலமாக நடக்கிறது.

மக்களின் பிரச்சினை ஒரு இரவில் தீர்க்க முடியாது தான் ஆனால் நல்லாட்சி அரசால் அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகவில்லை, பயங்கரவாத தடை சட்டம்  நீக்கப்படவில்லை இந்த நிலையே தொடர்ந்து காணப்படுகின்றது.

நல்லாட்சி காலத்தில் இரண்டு பிரதான கட்சிகளால் செய்ய முடியாததை இனியும் செய்வார்கள் என இல்லை. எனவே வடக்கு, கிழக்கில் எமது தாயக மக்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

எனவே காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு அளிக்கப்படவேணும், அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

இடைக்கால தன்னாட்சி அதிகார தீர்வுத்திட்டத்தை புலிகள் முன்னர் வைத்திருந்தார்கள். அதே போல தற்போதும் வழங்கலாம் இதனை தொலைக்காட்சி நேர்காணலில் கூட தெரிவித்திருந்தேன்.

இன்றைய கால கட்டத்தில் ஒரு பக்கம் சாய்ந்து மற்றவரை எதிர்க்க முடியாது. மஹிந்த ஜனாதிபதியாக இருந்து யுத்தத்தை நடத்தி எங்களை அழித்தாலும் போரின் பின்னரும் ஜனாதிபதியாக இருந்தார். அவருக்கு எதிராகவும் போராடினோம்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் யுத்த குற்றம் தொடர்பிலான விசாரணை வேண்டும் என்பதில் எந்த சமரசத்திற்கும் நாம் போக மாட்டோம்.

எனவே ஒரு எழுத்து மூல ஒப்பந்தம் செய்தே ஆதரவு வழங்க வேண்டும்.

நாளை மறுதினமும் மீண்டும் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறும் அதிலே இறுதி தீர்மானம். எட்டப்பட்டவுள்ளது.

எனவே 07 ஆம் திகதி கூட்டத்தில் தமிழ் தலமைகள் முட்டாள் தனமான காரியம் செய்து விட்டது என எவரும் விமர்சிக்கும் அளவிளற்கு விட மாட்டோம்.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 4 வருடங்களாகின்றன ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

எழுத்து மூலம் ஒப்பந்தம் இல்லாத நிலையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமரானாலும் நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டு வந்தால் ரெலோ ஆதரித்து வாக்களிக்காது. அதற்காக கூட்டமைப்பை விட்டு வெளியேறியதாக அர்த்தம் இல்லை.

கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடாது ஐக்கிய தேசிய முன்ணணிக்கு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் வைத்திருக்க கூடாது. ஆனால் அது நடந்து விட்டது.

இனி ஆதரவு வழங்குவதாக இருந்தால் நிச்சயமாக எழுத்து மூல ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)


Add new comment

Or log in with...