வவுணதீவு பொலிஸார் படுகொலை; முன்னாள் போராளி கைது | தினகரன்


வவுணதீவு பொலிஸார் படுகொலை; முன்னாள் போராளி கைது

வவுணதீவு பொலிஸார் படுகொலை; முன்னாள் போராளி கைது-Batticaloa-Vavunathivu Police Shotdead-Suspect Arrested at Kilinochchi-Vaddakkachchi-2

வட்டக்கச்சி நபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரண்

மட்டக்களப்பு வவுணதீவில் நேற்றைய தினம் (30) இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னாள் போராளி ஒருவர் இன்று (01) காலை சரணடைந்துள்ளார்.

மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கு பொலிசார் இடையூறு வழங்கியதனால் பழிவாங்குவதற்காக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என கருதி விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், குறித்த நபர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நேற்றையதினம் (30) மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேகநபருடன் பணியாற்றியவர்களை கைது செய்ய பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும் பணியாற்றியமை தெரியவந்த நிலையில், நேற்றையதினம் (30) அவரை கைது செய்வதற்காக கிளிநொச்சிப் பொலிஸ் விசேட குழு ஒன்று தேடுதல் மேற்கொண்டு வந்தது.

-Batticaloa-Vavunathivu-2 Police Constable Dead-மட். வவுணதீவு சோதனைச் சாவடியில் இரு பொலிஸார் சுட்டுக்கொலை

இந்நிலையில் அவர் இன்று (01) காலை  கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சரணடைந்தவர், வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (48) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இவரிடம் வாக்குமூலம்  பெறப்பட்டதன்  பின்னர், வவுணதீவுக்குச் சென்றுள்ள குற்றவியல் விசாரணைத் திணைக்கள (CID) அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, CID யினர் மேற்கொண்டுள்ளனர்.

(எஸ்.என். நிபோஜன், கிளிநொச்சி குறூப் நிருபர் - எம். தமிழ்ச் செல்வன்)


Add new comment

Or log in with...