பாராளுமன்ற பிரேரணை செல்லுபடியற்றது | தினகரன்

பாராளுமன்ற பிரேரணை செல்லுபடியற்றது

 நீதிமன்றில் இருக்கும் விடயத்தை சபையில் விவாதிக்க முடியாது

பிரதமரின் செலவினத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான யோசனையை விவாதத்துக்கு எடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் உரிய அனுமதிகூட பெறப்படவில்லை. அதேநேரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இவ்விடயத்தை விவாதத்துக்கு எடுப்பதற்கு எந்தவிதமான வாய்ப்புகளும் கிடையாதென சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் விடயம் தொடர்பில் விவாதிப்பதற்கு முடியாதென முன்னைய சபாநாயகர்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பை தற்போதைய சபாநாயகர் மீறியிருப்பதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

தமக்கு இல்லாத ஒரு அதிகாரத்தை எடுத்துக் கொண்டு செயற்படும் சபாநாயகர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி சட்டவிரோத சம்பிரதாயமற்ற விதத்தில் பாராளுமன்றத்துக்குள் செயற்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியதாவது,

நாம் சபாநாயகரை சந்தித்து அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய செயற்படுமாறு கோரிக்ைக விடுத்தோம். அதேபோன்று இதற்கு முன்னர் இருந்த சபாநாயகர்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி அதன்படி செயற்படுமாறு வேண்டுகின்றோம். பிரதமர் உட்பட அமைச்சரவையின் செலவினங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கிறது. அதன் பிரதிவாதிகளாக நாம் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளோம். பிரதிவாதிகளாக நாம் இருப்பதனால் அதற்கு பதிலளிப்பதற்காக நாம் நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது. நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது. நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாதென்று இதே சபாநாயகரால் கொடுக்கப்பட்டதொரு தீர்ப்பு அவராலேயே மீறப்பட்டுள்ளது.

அரசியலரமைப்பின் 152ஆவது சரத்துக்கமைய நிதி தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் தேவை. அமைச்சர் அல்லாத உறுப்பினரால் இவ்வாறான யோசனையை முன்வைக்க முடியாது. சபாநாயகரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைவர்கள் சிலரை மட்டும் கூட்டி கூட்டம் நடத்தியுள்ளார்கள். அந்த கட்சி தலைவர் கூட்டம் சட்டவிரோதமானது. அக்கூட்டம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பாராளுமன்ற கூட்டம் சட்டவிரோதமாகவும் அரசியலமைப்புக்கு முரணாகவும் நடத்தப்படும் நிலையே உருவாகியுள்ளது. எனவே இவ்வாறான பாராளுமன்ற அமர்வுக்கு எங்களால் செல்ல முடியாது.

மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படுவது 07 ஆம் திகதிக்குப் பின்னர் என்றே சபாநாயகர் அறிவித்திருந்தார். தற்போது பாராளுமன்றத்தின் சட்டதிட்டங்கள் ,சம்பிரதாயங்கள் சீர்குலைந்துபோகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...