அரசாங்க கட்சி குழுக்கூட்டத்தில் இன்று தீர்மானம் | தினகரன்

அரசாங்க கட்சி குழுக்கூட்டத்தில் இன்று தீர்மானம்

பிரதமருக்கான செலவீனங்களைத் தடுக்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை சட்டத்துக்கு புறம்பானது என்பதுடன், இது தொடர்பான விவாதத்தில் பங்கெடுப்பதா? இல்லையா? என்பது இன்று (29) காலை நடைபெறும் ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில் இதனை பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியுமா என்ற சட்டரீதியான தர்க்கம் இருப்பதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்த விடயத்தைத் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள  விவகாரத்தைப் பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியுமா என்ற பிரச்சினை உள்ளது.

எவ்வாறாயினும் பிரதமருக்கான செலவீனத்தைத் தடுக்கும் வகையில் பிரேரணையைக் கொண்டுவந்திருப்பதுடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்கு உட்படுத்தும் வகையிலும் அந்த யோசனை அமைந்துள்ளது. எனவே இதனை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

அத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பதாகக் கூறுகின்றனர். அது அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவோ அல்லது பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைவானதாகவோ அமையவில்லை. அது மாத்திரமன்றி நிறைவேற்று அதிகாரத்துடன் பாராளுமன்றத்துக்கு மோத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதனை உச்சநீதிமன்றம் சென்றே தீர்த்துக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்துக்குள் அதனைத் தீர்க்க முடியாது. இவ்வாறான நிலையில் நாளையதினம் (இன்று) பிரதமரின் செலவீனங்களைத் தடுப்பது குறித்த பிரேரணையில் கலந்துகொள்வதா இல்லையா என்பதை நாளை (இன்று) காலை நடைபெறும் ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே தீர்மானிப்போம் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...