Saturday, April 20, 2024
Home » ‘தி போல் பிளாஸ்டர் 2023’ இறுதிப் போட்டி இன்று; ஸாஹிரா-அலிகார் பலப்பரீட்சை

‘தி போல் பிளாஸ்டர் 2023’ இறுதிப் போட்டி இன்று; ஸாஹிரா-அலிகார் பலப்பரீட்சை

by gayan
December 10, 2023 12:06 pm 0 comment

பிரிவு 1 பாடசாலை அணிகளுக்கு இடையிலான 20 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான ‘தி போல் பிளாஸ்டர் 2023’ கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியும் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணியும் மோதவுள்ளன.

கல்வி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் Srilankan Sports TV நிறுவனத்தின் அனுசரணையோடு இடம்பெறும் இந்த தொடரின் போட்டிகள் கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வந்தன.

இலங்கையின் 20 முன்னணி பாடசாலைகளின் அணிகள் மோதும் இந்த தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் குழு நிலையாக இடம்பெற்றன. ஒரு குழுவில் 5 அணிகள் என்ற முறையில் மொத்தம் 4 குழுக்கள் பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் இடம்பெற்றன.

குழுநிலையின் நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் தொடரின் அடுத்த சுற்றான காலிறுதிக்கு தெரிவு பெற்றன. அந்த வகையில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள கொழும்பு ஸாஹிரா மற்றும் அலிகார் தேசிய பாடசாலை அணிகள் இரண்டும் குழு பி யில் இடம்பிடித்திருந்தன.

இதில் ஸாஹிரா வீரர்கள் குழுநிலைப் போட்டிகளில் 3 வெற்றிகள், ஒரு சமநிலையான முடிவுடன் 10 புள்ளிகளைப் பெற்று பி குழுவில் முதலிடத்தைப் பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர். அதே குழுவில் இடம்பிடித்த அலிகார் அணியினர் 2 வெற்றிகள், ஒரு தோல்வி மற்றும் ஒரு சமநிலையான முடிவுடன் 7 புள்ளிகளுடன் அக்குழுவில் இருந்து இரண்டாவது அணியாக காலிறுதிக்கு தெரிவாகியது.

இலங்கை பாடசாலைகள் கால்பந்தில் முன்னிலையில் இருக்கும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி மிகப் பெரிய எதிர்பார்ப்புடனேயே இம்முறை தொடரில் களமிறங்கியது. கடந்த முறை இதே தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் கண்ட அவ்வணிக்கு இம்முறை கிண்ணத்தை வெல்வதே ஒரே இலக்காக இருந்தது.

ஸாஹிரா வீரர்கள் இம்முறை காலிறுதிப் போட்டியில் கம்பளை ஸாஹிரா கல்லூரி அணியை 6:0 என இலகுவாக வெற்றி கொண்டனர். எனினும், அரையிறுதிப் போட்டி அவர்களுக்கு சற்று சவால்மிக்க ஆட்டமாக அமைந்தது. இம்முறை தொடரில் முதல் முறையாக இணைந்த கொழும்பு தாருஸ்ஸலாம் கல்லூரியுடனான அரையிறுதி ஆட்டத்தில் ஸாஹிரா வீரர்கள் சிறந்த ஒரு போட்டியைக் கொடுத்து 3:2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

தொடரின் அரையிறுதி வரையில் எதிரணிகளுக்கு எந்தவொரு கோலையும் கொடுக்காத ஸாஹிரா வீரர்களுக்கு எதிராக தாருஸ்ஸலாம் அணி மாத்திரமே கோல் பெற்றுள்ளது.

ஸாஹிரா கல்லூரி அணியை பார்க்கும்போது இலங்கை இளையோர் தேசிய அணிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட நான்கு வீரர்கள் உள்ளனர். அப்துல்லாஹ், பரீக் அஹமட், சதீர் மற்றும் சஹீல் ஆகிய இந்த நான்கு வீரர்களினதும் அனுபவம் அவ்வணிக்கு அதிக பலத்தைக் கொடுக்கின்றது.

மேலும், அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடந்த 6 வருடங்களாக செயற்படும் மொஹமட் இம்ரான் அணியை முழுமையாக அறிந்து, போட்டிக்கு போட்டி தனது திட்டங்களை மாற்றக்கூடியவர். இறுதிப் போட்டிக்கான தயார்படுத்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, இந்த போட்டிக்கு தமது திட்டங்களை முழுமையாக மாற்றியுள்ளதாக பயிற்றுவிப்பாளர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பல ஆண்டுகள் பாடசாலைகள் கால்பந்தில் பல கிண்ணங்களை வென்றுள்ள இக்கல்லூரிக்கு தமது பெருமையை தக்கவைத்துக்கொள்ள ‘தி போல் பிளாஸ்டர் 2023’ சம்பியன் கிண்ணமும் பிரதான இலக்காக உள்ளது.

அலிகார் தேசிய பாடசாலை
கடந்த வருடம் பிரிவு இரண்டில் இருந்து தரமுயர்த்தப்பட்டு பிரிவு 1 பாடசாலை அணிகளுக்கு இடையிலான 20 வயதின் கீழ் தொடருக்கு முதல் முறை காலெடுத்து வைத்த வருடத்திலேயே அலிகார் அணி இறுதிப் போட்டிவரை முன்னேறியுள்ளமை சிறப்பம்சமாகும்.

இவர்கள் தமது காலிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரிக்கு எதிராக 5:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றனர். பின்னர் அரையிறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் கொழும்பு புனித ஜோசப் கல்லூரியை 2:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டனர்.

அலிகார் அணி வீரர்கள் இந்த தொடரில் மட்டக்களப்பில் இடம்பெற்ற தமது முதல் போட்டியில் (குழுநிலைப் போட்டி) கொழும்பு ஸாஹிரா அணியிடம் 1:0 என தோல்வியடைந்தனர். இதுவே இந்த அணி தொடரில் சந்தித்த ஒரே தோல்வியாகும்.

அந்த அணியினைப் பார்க்கும்போது தொடர்ச்சியாக கழக மட்டத்தில் விளையாடிய அனுபவத்தைப் பெற்ற பல வீரர்கள் உள்ளனர். அந்த அனுபவமும், அலிகார் அணி வீரர்களின் வேகமும் இதுவரை அனைத்து எதிரணிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தவிர ஸாஹிரா அணியை போன்றே முன்ஷிப், தில்ஹாம் ஆகிய இருவரும் இலங்கை இளையோர் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களாக உள்ளனர்.

அணியின் பயிற்றுவிப்பாளர் அஸ்பஹானைப் பார்க்கும்போது சுமார் 10 வருடங்களுக்கு மேல் இந்த கல்லூரியில் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட அனுபவம் கொண்டவர்.

இறுதிப் போட்டி
பல மாதங்களாக இடம்பெற்று வந்த இந்த தொடரின் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச அரங்கில் மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதே தினம் பி.ப ஒரு மணிக்கு தொடரின் 3ஆம், 4ஆம் இடங்களைத் தீர்மானிப்பதற்கான போட்டியும் இடம்பெற உள்ளது. இந்த போட்டியில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு தாருஸ்ஸலாம் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT