Home » மர்ஹும் ரஸ்வி ஹாஜியாரின் மறைவிற்கு அல் ஸலாஹ் அரபுக் கல்லூரி அனுதாபம்

மர்ஹும் ரஸ்வி ஹாஜியாரின் மறைவிற்கு அல் ஸலாஹ் அரபுக் கல்லூரி அனுதாபம்

by sachintha
December 8, 2023 1:37 am 0 comment

சீனன்கோட்டை அல்-ஸலாஹ் அரபுக் கல்லூரியின் நிர்வாக சபைத்தலைவர் மர்ஹும் எம்.எஸ்.எம் ரஸ்வி ஹாஜியாரின் மறைவையிட்டு கல்லூரி நிர்வாகம், அதிபர், உஸ்தாதுமார்கள், மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.

மர்ஹும் ரஸ்வி ஹாஜியார் தனது செல்வங்களை மக்களுக்கு அறிந்தும் மறைத்தும் தாராளமாக தர்மம் செய்து வந்தார்கள். அன்னார் இயல்பாகவே இரக்க சுபாவம், பரோபகார சிந்தனை, பணிவான பண்பு, கனிவான பேச்சு, மலர்ந்த முகம் ஆகிய நற்குணங்களை கொண்டவராக இளம் பராயம் தொட்டே காணப்பட்டார்கள்.

1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட China Fort YMMA இயக்கத்தில் இளம் வாலிபராக தனது 20ம் வயதில் இணைந்து முழுமையாக பங்காற்றினார்கள். இரத்தினக்கல் வியாபாரியாக தனது தொழிலை ஆரம்பித்து மிக நேர்த்தியாக நேர்மையுடன் செய்து அல்லாஹ்வின் அருளால் முன்னேற்றமாகி பிரபல மாணிக்க வியாபாரியானார். இவையாவும் அல்லாஹ்வால் தனக்கு வழங்கப்பட்ட அருள் வளங்கள் என்பதை கருத்தில் கொண்டு தூய எண்ணத்துடன் தனது செல்வங்களை நன்மையான பல வழிகளிலும் பகிர்ந்தளித்து ஊருக்கும் நாட்டிற்கும் பெரும் நல்ல பல பணிபுரிந்தார்.

அன்னார், நாட்டில் ஏற்படும் எல்லாவித இடர் அனர்த்தங்களின் போதும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உடனடியாக பேருதவி செய்வதில் முன்னணியில் நின்று செயல்பட்டவர். அவர் நாட்டின் பலபகுதிகளிலும் உள்ள மஸ்ஜிதுகள், மத்ரஸாக்கள், ஏனைய நலன்புரி ஸ்தாபனங்கள் என பல வகையிலும் பெருமனதோடு தாராளமாக தானம் செய்துள்ளார். இன்னும் உயிருக்குப் போராடும் பெரும் நோயாளிகளின் சிகிச்சைக்கான பெரும் செலவுகளை தாமாக முன்வந்து ஏற்றுக் கொண்டவராவார்.

சமூகத்தில் ஏற்படும் சச்சரவுகளின் போது சமாதான தூதராக முன்வந்து சமரசம் செய்து வைப்பதிலும் அக்கறையுடன் செயல்பட்ட பெருமகனாவார். அன்னார் தனது சொந்த வேலைப்பழுக்களோடு சிரமம்பாராது நேரம் ஒதுக்கி பொதுத் தேவைகள், சமூகசேவைகள், கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள், பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சிகள் இன்னும் பலவற்றிலும் ஆர்வத்துடன் அர்ப்பணிப்புடன் பங்களிப்புச் செய்துவந்தார்.

பேருவளை ஜாமியா நளீமிய்யா, இக்ராஃ, சீனன்கோட்டை பள்ளிச் சங்கம் ஆகியவற்றின் உப தலைவராக சிறப்பாக செயல்பட்டார். விசேடமாக சீனன்கோட்டையில் ஸகாத் நிதிகளை ஒன்றுதிரட்டி முறையான செயல் திட்டங்களுக்கு வழிவகுக்கும் அடிப்படையில் இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்பதாக சீனன்கோட்டை ஸகாத் நிறுவனத்தை ஆரம்பித்தவராகவும் அதன் தலைவர் பொறுப்பையும் ஏற்று மிகவும் சிறந்த முறையில் செயல்படுத்தி வந்தார்.

அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் அருள்களை அள்ளித்தரும் அரும்பெரும் முயற்சியாக அல்குர்ஆனை மனனம்செய்யும் ஹாபிழ்களை நபிமார்களின் வாரிசுகளான உலமாக்களை உருவாக்கும் மிக உயர்ந்த ஒருபணியை சீனன்கோட்டையின் மத்தியில் அல்-ஸலாஹ் அரபுக் கல்லூரி எனும் பெயரில் அனைத்து வளங்களையும் கொண்டதாக மிகஅழகான முறையில் அமைத்துக் கொள்வதில் ஆரம்பம் தொட்டு ஆர்வத்துடன் செயல்பட்டவராகவும் அதன் முக்கிய பொறுப்புக்களை ஏற்றுநடத்தும் கௌரவ தலைவராகவும் தனது இறுதி மூச்சுவரை பங்களித்துப் பணி செய்தார். இன்னும் பலமுன்னேற்றத்துக்கான முன்யோசனைகளையும் வேலைத் திட்டங்களையும் செய்வதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் தான் அல்லாஹ் அன்னாரை அவன் பக்கம் அழைத்துக் கொண்டான். அன்னாரது ஆசை மிக்க அந்த முன்னேற்றபாதையில் தொடர்ந்து பயணிக்க அல்லாஹ் அருள் செய்வானாக!

யாஅல்லாஹ் அன்னாரின் அனைத்து நற்கருமங்களையும் முழுமையாக ஏற்று கபூல் செய்ய வேண்டுமென மத்ரஸதுல் ஸலாஹ் நிர்வாகம் உட்பட மாணவர்களும் பிரார்த்திப்பதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT