Friday, March 29, 2024
Home » வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் முறை ஆரம்பமானது

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் முறை ஆரம்பமானது

by sachintha
December 8, 2023 6:49 am 0 comment

இதுவரை 900 மின்சார வாகனங்களுக்கு அனுமதியளிப்பு

இதுவரை 100 மில். அமெ. டொலர்களுக்கும் அதிகமான பணம் வெளிநாடு வாழ் இலங்கை ஊழியர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

இலங்கையில் சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கென வெளிநாட்டு பணியாளர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை இந்த முறைமையின் மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான பணம் வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் பத்திரங்களை, விநியோகிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார, திறைசேரி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளாலே இந் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு விவாதத்தில் நேற்று (07) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவு மீள்வதற்கு உதவிய முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் கொள்கைகள் குறித்து பேசினார். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி கூறினார். அம்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளக்கு நாம் ஒரு போது இடமளிப்பதில்லை. அதற்கு எதிராக அன்றும் இன்றும் குரல் கொடுக்க ஒருபோதும் தயங்குவதில்லை. அன்று எதிர்கட்சியில் இருந்த போதும் குரல்கொடுத்தோம். அரசாங்கத்துடன் இன்று இருந்தாலும் இதே நிலைப்பாட்டை நாம் முன்னெடுக்கின்றோம். மீண்டும் நாட்டில் அவ்வாறான நிலை ஏற்படாதவகையில் நாட்டை முன்னெடுப்தற்கு செயல்பட்டுவருகின்றோம். இணையதளம் ஊடாக இனவாத விடயங்களை முன்னெடுத்து இனங்களுக்கிடையியே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். புலம் பெயர்தொழிலாளர்களுக்காக நாம் மின்சார வாகன இறக்குமதிக்கான அனுமதிபத்திர முறையை நடைமுறைப்படுத்தினோம். சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், இந்த நடைமுறை மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட தொகையை புலம்பெயர் ஊழியர்கள் நாட்டுக்கு அனுப்பி இருப்பதாகவும் கூறினார். இருப்பினும், இவர்களுக்கான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் பத்திரங்களை Letter of Credit வழங்குவதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திறைசேரி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளினால் இந்தக்கடிதங்களுக்கான நீடிப்பு தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் காலத்திலும், மஹிந்த ராஜபக்சவின் காலத்திலும் இவ்வாறான அதிகாரிகள் இருந்தனர். இவ்வாறான அதிகாரிகள் எப்பொழுதும் இருக்கின்றனர் . விசேடமாக டொக்டர் கபில சேனாநாயக்க என்பவரும் அங்குதான் இருக்கின்றார். புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்பக்கூடாது என்று பிரசாரம் செய்யப்பட்ட காலத்தில் இருந்த அதிகாரிகள் இன்றும் அங்கு இருக்கின்றனர். நாடு டொலர் இன்றி சிரமப்பட்ட காலத்தில் டொலர்களை அனுப்பிய மக்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் பத்திரங்களை (Letter of Credit) வழங்குவதில் சிலர் தடையாக இருக்கின்றனர்.

இவர்கள் எத்தகைய அரசியல் நோக்கத்துடன் செயல்படுகின்றனர் என்பது எமக்கு புரியவில்லை. நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறியவர்கள் போன்று நாட்டை மீண்டும் வங்குரோத்துக்கு உள்ளாக்கும் நோக்கத்தை கொண்டவர்களுடன் நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட் டார். மக்களை தூற்றுவதற்கும் அவர்கள் மீது தகாத சொல் பிரயோகத்தை மேற்கொள்வதற்கும் குற்றம் சுமத்துவதற்கும் சிலர் முயற்சிக்கின்றனர்.

எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராகவும் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. இதனை தடுப்பதற்காக இணைய தள பாதுகாப்பு சட்டம்கொண்டுவரப்படுகிறது. அதனால் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஒரு நாடு மாற வேண்டுமானால், மக்கள் சட்டத்தை மதிக்கும் குழுவாக மாற வேண்டும்.அதனால் தான் இப்படி ஒரு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT