கொழும்பு, எஸ்எஸ்சி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இலங்கை டெஸ்ட் அணியில் சுழல் பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸை தேர்வுக் குழு இணைத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பந்துவீச்சு முறை குறித்து சோதிப்பதற்காக அகில தனஞ்சய பிரிஸ்பேர்ன் நோக்கி பயணித்துள்ளதால் அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத நிலையிலேயே அவரது இடத்திற்கு நீர்கொழும்பைச் சேர்ந்த 21 வயதான இந்த உயரமான வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக பல்லேகலயில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 115 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சை வெளிக்காட்டிய அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறை பற்றி காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது சந்தேகம் எழுப்பப்பட்டது.
அவர் தனது பந்துவீச்சு குறித்து உயிர் இயந்திரவியல் சோதனை ஒன்றை மேற்கொள்ள 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருப்பதோடு ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்திருக்கும் சென்னையிலுள்ள மையத்தில் அவர் தனது சோதனையை செய்துகொள்ள எதிர்பார்த்திருந்தார்.
எனினும் சென்னை சோதனை மையத்தில் தற்போதும் மேம்பாட்டு நடவடிக்கைகள் நடைபெறுவதால் அகிலவை ஐ.சி.சி. அங்கீகரித்த அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் சோதனை மையத்திற்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் முடிவெடுத்துள்ளது.
முதல் முறை தேசிய அணிக்கு அழைக்கப்பட்டிருக்கும் நிஷான் பீரிஸ் குறுகிய காலத்தில் தேர்வாளர்களின் அவதானத்தை பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணிக்காக விளையாடிய அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முன்னாள் தலைவரான பீரிஸ் 12 முதல்தர போட்டிகளில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தி 29.52 என்ற சிறந்த பந்துவீச்சு சராசரியை பெற்றுள்ளார்.
Add new comment