எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் சாத்தியமில்லை | தினகரன்

எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் சாத்தியமில்லை

இலங்கை அரசியல் நிலைமைகளைக் காரணமாகக் கொண்டு எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் சாத்தியக்கூறு இல்லையென சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

ஒரு சில சர்வதேச நாடுகளின் உதவியுடனேயே 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தை பதவி நீக்குவதற்கு சில நாடுகள் தமது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளனவே தவிர அதற்கும் இலங்கைக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் அவர் கூறினார்.

இதேவேளை நாட்டில் தற்போது இடம்பெற்றுள்ள அரசியல் மாற்றத்தை காரணம் காட்டி நாட்டுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிப்பது பொருத்தமற்ற செயற்பாடென்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தவறான தகவல்களை வழங்கியும் மக்களை வீதியில் இறக்கியும் நாட்டில் பெரும் குழப்பநிலையை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துமாறு எதிர்வரும் டிசம்பர் 07 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவி வகித்துவிடுவாரென்ற அச்சத்தில் ஐ.தே.க, நாட்டுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கக்கோரி சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை நாடியிருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

அத்துடன் சர்வதேச நாடுகள் தான் நினைத்தவாறு ஒன்று அல்லது இரண்டு நாட்களுள் தடையுத்தரவை பிறப்பிக்க முடியாது. அது ஒரு நீண்ட செயன்முறையென்றும் அவர் கூறினார்.

 


Add new comment

Or log in with...