அரச தோட்டங்களில் காணிகளின் விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு | தினகரன்

அரச தோட்டங்களில் காணிகளின் விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

இன்று 2 மணிவரை அமைச்சர் சந்திரசேன காலக்ெகடு

பெருந்தோட்ட அபிவிருத்தி சபை,அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம்,எல்கடுவ பெருந்தோட்ட யாக்கம் ஆகிய நிறுவனங்களின் கீழியங்கும் தோட்டங்களின் காணிகளின் முழு விபரங்களையும் இன்று இரண்டு மணிக்கு முன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளருக்கு கையளிக்கும்படி மேற்படி நிறுவனங்களின் தலைவர்களுக்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன நேற்று உத்தரவிட்டுள்ளார். இவற்றில் வளமான காணிகள், நடுத்தர வள காணிகள், கைவிடப்பட்ட நிலையிலுள்ள காணிகளின் முழு விபரங்களும் கோரப்பட்டுள்ளன.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கிடையிலான சந்திப்பு மனிதவள அபிவிருத்தி நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், எல்கடுவ பெருந்தோட்ட யாக்கம் ஆகிய நிறுவனங்களின் கீழ் இயங்கும் தோட்டங்களை மீள் புனரமைப்பு செய்து வளமுள்ள தோட்டங்களாக மாற்றுவதற்கு நிர்வாக நடவடிக்கை தடையாக இருப்பதாகவும் அமைச்சர் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு பல வருட காலமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதிகள் செலுத்தப்படவில்லை.

வளமான நிலங்களை ஏ,பி,சீ என பிரித்து வெளியாட்களுக்கும்,சில அரசியல்வாதிகளுக்கும் பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டம் வெளிப்படையாகவே கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது.எனவே இதை தடுத்து நிறுத்தி காணிகளை மீளபெறுமாறு பெருந்தோட்ட கைதொழில் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் கவனத்திற்கு அமைச்சர் தொண்டமான் கொண்டுவந்தார்.

அமைச்சர் தொண்டமானின் கருத்துக்களை செவிமடுத்த அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இத் தோட்டங்களின் வளமான தேயிலை வளரும் நிலங்கள், நடுத்தர தேயிலை வளரும் நிலங்களை இனங்கண்டு கைவிடப்பட்ட நிலங்களின் விபரங்களையும் இன்று(21) இரண்டு மணிக்கு முன் பெருந்தோட்ட கைதொழில் அமைச்சின் செயலாளருக்கு கையளிக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார்.

இச் சந்திப்பின் போது அமைச்சரான சீ.பி. ரத்னாயக்க,மனிதவள அபிவிருத்தி நிலைய தலைவர் எஸ்.அருள்சாமி,எல்கடுவ பெருந்தோட்ட யாக்கத்தின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். தோட்ட நிறுவனத்தலைவர்கள இன்று அமைச்சரிடம் முழு மையான அறிக்கை கையளித்ததன் பின்னர் இன்று மாலை அமைச்சருடன் மீண்டுமொரு சந்திப்பு நடைபெறவுள்ளதாக மனிதவள அபிவிருத்தி நிலையத் தலைவர் எஸ்.அருள்சாமி தினகரனுக்குத் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...