Friday, March 29, 2024
Home » உடல் உள ஆரோக்கியத்தை வலியுறுத்தும் மார்க்கம்

உடல் உள ஆரோக்கியத்தை வலியுறுத்தும் மார்க்கம்

by sachintha
December 8, 2023 11:25 am 0 comment

மனிதன் பெற்றுக்கொண்டுள்ள அருட்கொடைகளில் ஆரோக்கியம் மிக முக்கியமானதாகும். இது தொடர்பில் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

‘ஒரு நாள் விடுகின்ற போது ஆரோக்கியமான உடலுடனும் பாதுகாப்பான வீட்டுடனும் அன்றைய நாளின் உணவுடனும் ஒருவன் காணப்படுவானாயின் அவன் உலகை அதன் அனைத்து பாகங்களுடனும் பெற்றுக் கொண்டவனாவான்’ (ஆதாரம்- : திர்மிதி)

இஸ்லாம் உடல், உள ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வாழ்க்கை முறையாகும். நபி (ஸல்) அவர்கள் கூட ஆரோக்கியத்தை வேண்டி அல்லாஹ்விடம் தினமும் பின்வருமாறு பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

‘இறைவா! எனது உடலிலும் எனது பார்வை செவிப்புலன்களிலும் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவாயாக’ (ஆதாரம்- : அபூதாவூத்)

‘பலசாலியான ஒரு முஃமின் பலவீனமான ஒரு முஃமினை விட சிறந்தவனும், அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவனுமாவான்’ (ஆதாரம்- : முஸ்லிம்) என்றும் அன்னார் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியம் இன்றியமையாதது. ஏனெனில் அவன் நிறைவேற்ற வேண்டிய அடிப்படை இபாதத்கள், சமூகப் பணிகள், வாழ்வதற்கான உழைப்பு முதலான அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு உடலாரோக்கியம் மிகவும் அவசியம். ஆதலால் ஸஹாபாக்கள் உடலை ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் வைத்திருந்தார்கள். பகலில் குதிரை வீரர்களாகவும் இரவில் துறவிகளாகவும் வாழ்ந்து தம்மை புடம்படுத்திக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘ஐந்து நிகழ்வுகள் இடம் பெற முன்னர் ஐந்து வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்றார்கள். அதிலொன்று நோய் வருமுன் ஆரோக்கியத்தைப் பயன்படுத்தல் ஆகும். ஆரோக்கியமான உடலிலேயே ஆரோக்கியமான உள்ளம் காணப்பட முடியும்.

‘ஒரு முஸ்லிம் உணவில் நடுநிலமையைப் பேண வேண்டும். அளவு கடந்து உண்பதையும் உடலுக்கு ஒவ்வாதவற்றை உட்கொள்வதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ‘மனிதன் வயிற்றைத் தவிர கெட்ட பாத்திரம் ஒன்றை நிரப்புவதில்லை. சாப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மூன்றிலொரு பகுதி உணவுக்கும் மூன்றிலொரு பகுதி நீருக்கும் மூன்றிலொரு பகுதி காற்றுக்கும் வகுத்துக் கொள்ள வேண்டும்’ (ஆதாரம்- : திர்மிதி) என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆதலால், தமது உடலாரோக்கியத்தைக் காத்துக்கொள்ளும் வகையில் தமது உணவுப் பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது இறைவிசுவாசிகளின் பொறுப்பாகும்.

மேலும் ஆரோக்கியமாக வாழ சுத்தமும் இன்றியமையாததாகும். உடலையும், உடையையும் மட்டுமன்றி உணவு, உறைவிடம், தொழிற்தளம், பாவனைப் பொருட்கள் முதலான அனைத்திலும் சுத்தம் பேண வேண்டும். குளித்து உடம்பைச் சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் பற்றியும் இஸ்லாம் எடுத்தியம்பியுள்ளது. ‘நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இல்லாதிருந்தாலும் ஜும்ஆ நாளில் குளித்து தலையைக் கழுவிக் கொள்ளுங்கள். மணம் பூசிக்கொள்ளுங்கள்’ (ஆதாரம்- : புஹாரி) எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மனிதன் எல்லா நிலையிலும் சுத்தமாக இருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகின்றது. தூய்மையான நறுமணப் பொருட்கள் மூலம் உடம்பை நறுமணம் கமழச் செய்வது சிறப்புக்குரியதாகும்.

உடலாரோக்கியத்தைப் பேணுவதில் ஓய்வுக்கும் பங்குண்டு. களைப்பற்ற உடம்பால் உற்சாகமாக இயங்க முடியாது. கடமைகளை உயிரோட்டத்துடன் நிறைவேற்ற முடியாது. நாம் ஓய்வெடுத்துக்கொள்ளும் போது எமது உடலுறுப்புக்கள் சோர்வு, களைப்பு போன்றவற்றிலிருந்து நீங்கி புத்துணர்ச்சி பெறுகின்றன. மீண்டும் உற்சாகத்துடன் பணியாற்றுவதற்கான சக்தியையும், உத்வேகத்தையும் பெற்றுக்கொள்கின்றன. இதனைத் தான். ‘இன்னும் இரவையும் பகலையும் உங்களுக்கு அவனே ஆக்கினான். (இரவை) அதில் நீங்கள் இளைப்பாறுவதற்கும் பகலை (அதில்) நீங்கள் அவனுடைய அருளைத் தேடுவதற்கும் இன்னும் நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் (அவ்வாறு) ஆக்கியுள்ளான்.(28:73) என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

எனவே ஒவ்வொரு முஸ்லிமும் தனது உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் காட்டப்படும் அலட்சியம் மனிதனை ஆபத்தில் வீழ்த்திவிடும். இதனால் தான் ‘அதிகமான மக்கள் அலட்சியமாக நடந்து கொள்ளும் இரண்டு அருட்கொடைகள் ஆரோக்கியமும் ஓய்வுமாகும்’ (ஆதாரம்- : புஹாரி) எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதேநேரம் ‘அல்லாஹ் உங்களது உடல்களையோ, வடிவங்களையோ நோக்குவதில்லை. உங்கள் உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான் ‘எனவும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்- : புஹாரி, முஸ்லிம்)

இஸ்லாத்தின் பார்வையில் உடலுறுப்புகளின் நற்செயல்களை விடவும் உள்ளத்தின் நற்செயல்களுக்கான நன்மைகள் அதிகமாகும். ஆரோக்கியமான உள்ளத்திலிருந்தே ஆரோக்கியமான நற்செயல்கள், சிந்தனைகள் வெளிப்பட முடியும். உடலாரோக்கியத்தை விடவும் உள ஆரோக்கியம் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். உள்ளம் தான் உடலை இயக்குகின்றது. ‘உடம்பில் ஒரு தசைத்துண்டு உண்டு. அது சீரானால் முழு உடம்பும் சீராகிவிடும். அது சீர்கெட்டு விட்டால் முழு உடம்பும் சீர்கெட்டுவிடும். அதுதான் உள்ளம்’ (ஆதாரம்- புஹாரி) என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

உள்ளம் பாதிப்படைந்தால் உடல் நோய்வாய்ப்படும் என்பதை மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்கிறது. மனிதன் உடலை நோக்க, அல்லாஹ் உள்ளத்தை நோக்குகின்றான். உள்ளம் என்பது மனிதனுக்கு மட்டுமே உரியதொரு சிறப்பாகும். உள்ளத்துக்கு மட்டுமே இறைவனை அறியும் சக்தி உண்டு. உள்ளம் ஆரோக்கியமாக இருக்க எப்போதும் அல்லாஹ்வை நினைவுபடுத்த வேண்டும். திக்ர், துஆ, இஸ்திஃபார் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். சொற்ப நேரமாவது தனித்திருந்து அல்லாஹ்வுடன் முனாஜாத் செய்தல், படைப்புகள் பற்றி சிந்தித்தல், இரவு வணக்கங்களில் ஈடுபடல், ஸுன்னத்தான தொழுகைகளை அதிகரித்தல், நபிலான நோன்புகளை நோற்றல், தர்மம் செய்தல் போன்றன உள்ளத்தைப் போசிக்கும்.

ஆகவே உடலாரோக்கியத்தையும், உள ஆரோக்கியத்தையும் பேணி நல்ல மனிதர்களாக வாழ்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்.

மௌலவி எம்.யூ.எம். வாலிஹ்…

(அல் அஸ்ஹரி), வெலிகம

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT