முன்கூட்டிய தேர்தலில் இருந்து தப்பினார் இஸ்ரேல் பிரதமர் | தினகரன்

முன்கூட்டிய தேர்தலில் இருந்து தப்பினார் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் கூட்டணி அரசில் இருந்து விலகும் முடிவை அதன் பங்குக் கட்சி ஒன்று மாற்றிக் கொண்டதை அடுத்து அங்கு முன்கூட்டி தேர்தல் ஒன்று இடம்பெறும் வாய்ப்பு தணிந்துள்ளது.

ஜுஸ் ஹோம் கட்சியின் நப்தாலி பென்னட், அரசில் இருந்து விலகுவதாக கூறியவந்த நிலையில் தொடர்ந்து அரசில் நீடிக்கப்போவதாக நேற்று அறிவித்துள்ளார்.

தனது கூட்டணி அரசை தக்கவைத்துக் கொள்ள இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அண்மைய தினங்களாக பங்குக் கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தார்.

காசா போராளிகளுடன் இஸ்ரேல் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இணங்கியதற்கு எதிர்ப்பு வெளியிட்டு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் விலகியதை அடுத்தே இஸ்ரேலில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் தாம் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படாத பட்சத்தில் தமது கட்சி கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பென்னட் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது பாதுகாப்பு அமைச்சு பொறுப்பை நெதன்யாகு தன் வசம் வைத்துக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சராக இருந்த அவிக்டர் லிபர்மன் மற்றும் அவரது யிஸ்ராயேல் பெடுன் கட்சி கூட்டணி அரசில் இருந்த விலகியதை அடுத்து நெதன்யாகு அரசு இஸ்ரேல் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தால் மாத்திரமே பெரும்பான்மை பெற்றுள்ளது.

கூட்டணியில் உள்ள மூன்றாவது மிகப்பெரிய கட்சியின் தலைவராக கல்வி அமைச்சர் நப்தாலி பென்னட் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேலின் பாதுகாப்பு பிரச்சினை குறித்து பிரதமர் பதில் அளிக்கும் வரை தாமும் தமது நீதி அமைச்சர் அடியலெட் ஷக்கிட்டும் அரசில் நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்கூட்டிய தேர்தலுக்கு எதிர்ப்பு வெளியிட்ட நெதன்யாகு, தற்போதைய பாதுகாப்பு நிலையில் அது பொறுப்பற்ற முடிவு என்று குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...