அபு தாபி டெஸ்ட்: நான்கு ஓட்டங்களால் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து | தினகரன்

அபு தாபி டெஸ்ட்: நான்கு ஓட்டங்களால் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

அபு தாபியில் நடைபெற்ற பரபரப்பான முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் வீழ்த்தி நியூசிலாந்து 4 ஓட்டங்களால் அதிர்ச்சி வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் -– நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் அபு தாபியில் கடந்த 16ம் திகதி தொடங்கியது. நாணயச்சுழற்றியில் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 153 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 227 ஓட்டங்கள் சேர்த்தது.

74 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹசன் அலி, யாசிர் ஷா தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த நியூசிலாந்து 249 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது.

இதனால் பாகிஸ்தானுக்கு 176ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து. 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்கள் எடுத்திருந்தது. நேற்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்று மேலும் 11 ஓட்டங்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது பாகிஸ்தான்.

4-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் அசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் 130 ஓட்டங்களாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. அசாத் ஷபிக் 45 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 155 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது பாகிஸ்தான்.

ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் அசார் அலி அரைச்சதம் அடித்து வெற்றிக்காக போராடினார். வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 9-வது விக்கெட்டுக்கு வந்த ஹசன் அலி ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் 164 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி விக்கெட்டுக்க அசார் அலி உடன் முகமது அப்பாஸ் ஜோடி சேர்ந்தார். அப்பாஸை எதிர்முனையில் வைத்துக் கொண்டு அசார் அலி ஒவ்வொரு ஓட்டமாக எடுத்தார். 11 ஓவர்கள் தாக்குப்பிடித்து 7 ஓட்டங்கள் எடுத்தார் அசார் அலி. இறுதியில் 65 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பட்டேல் பந்தில் எல்பிடபிள்யூ ஆக பாகிஸ்தான் 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது.இதனால் பரபரப்பாக சென்ற டெஸ்டில் நியூசிலாந்து 4 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றது. பட்டேல் சிறப்பாக பந்து வீசி ஐந்துவிக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.


Add new comment

Or log in with...