பிரதமரின் செயலாளரது செலவினங்களை கட்டுப்படுத்தும் பிரேரணை சமர்ப்பிப்பு | தினகரன்

பிரதமரின் செயலாளரது செலவினங்களை கட்டுப்படுத்தும் பிரேரணை சமர்ப்பிப்பு

29இல் விசாரணை என எதிரணி தெரிவிப்பு

பிரதமரின் செயலாளரின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் பிரேரணையொன்றை சபாநாயகரிடம் சமர்ப்பித்திருப்பதாகவும், இப்பிரேரணை எதிர்வரும் 29ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாகவும் எதிரணியினர் தெரிவித்தனர்.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் குழு அறையில் நடத்திய ஊடகவியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.

ஜனாதிபதியுடன் நடத்திய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதைப் போன்று மீண்டும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்புக்கு நடத்த தீர்மானித்தோம். எனினும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆளும் தரப்பில் இருப்பவர்கள் எதிர்ப்பை வெ ளியிட்டனர். மீண்டும் அவர்கள் குழப்புவார்கள் என்பதால் வாக்கெடுப்புக்குச் செல்லாதிருக்கத் தீர்மானித்ததாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எனினும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள 122 பேர் குழு என்ற அடிப்படையில் பிரதமரின் செயலாளரின் செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் அடையாள பிரேரணையொன்றை சமர்ப்பித்தோம். இதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்டு, உரிய ஐந்து வேலைநாட்களை வழங்கி முறையாக 29ஆம் திகதி அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள சபாநாயகர் இணங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நிதி தொடர்பில் தீர்மானிக்கும் உரிமை பாராளுமன்றத்துக்கே இருப்பதால் இவ்வாறான பிரேரணையை கொண்டுவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களைப் பெயரிடுமாறும் சபாநாயகர் கோரினார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் பாராளுமன்றம் கூடும்போது சபாநாயகர் தெரிவுக்குழு உறுப்பினர்களை அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை எதிர்வரும் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிரூபிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், இது அடையாள ரீதியான பிரேரணையாகவிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 148ஆவது சரத்தின் பிரகாரம் நிதி நிர்வாக அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உள்ளது. இதற்கு அமைவாகவே பிரேரணையை முன்வைத்துள்ளோம்.

முதற்கட்டமாக பிரதமரின் செயலாளருடைய செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் பிரேரணையையே முன்வைத்துள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பின்னர் தீர்மானிக்கப்படும் என எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை இல்லை என்பதாலேயே வாக்கெடுப்புக்கள் நடத்தப்படுவதைக் குழப்பி வருகின்றன என ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

 லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...