பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக பிரேரணை கொண்டுவருவதானால் தெளிவுபடுத்த வேண்டும் | தினகரன்

பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக பிரேரணை கொண்டுவருவதானால் தெளிவுபடுத்த வேண்டும்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதானால் அதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தும் மகஜரை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி முன்வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

அவ்வாறில்லாவிட்டால் போலித் தகவல்களை சமர்ப்பித்தோ அல்லது அரசியலமைப்புக்கு முரணாகவோ செயற்பட்டோ பிரதமரை பதவி நீக்க இடமளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், சபாநாயகர் தமது உத்தியோகபூர்வ செயற்பாடுகளைச் செய்யாமல் காட்டுச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயற்படுகின்றார். அவ்வாறு செயற்பட்டால், அவருக்கு சபாநாயகர் ஆசனத்தில் அமருவதற்கான தகுதி இல்லாமற் போய்விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பொதுஜனபெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் “ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரையோ, அமைச்சரவையையோ ஏற்றுக்கொள்ள முடியாதென சபாநாயகர் கூறி வருகின்றார். அவர் எவராவது பிரபு ஒருவருக்காக செயற்படுகின்றாரா எனச் சந்தேகமாக உள்ளது.

இலங்கை பாராளுமன்றத்தின் வரலாற்றில் முதல் தடவையாக சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களைத் தற்போதுள்ள அரசாங்கம் கூறுவது போல் செயற்பட வேண்டாமெனவும் பொலிஸாருக்கும் அத்தகைய பணிப்புரைகளை அவர் வழங்கிவருகின்றார். அதற்கான அதிகாரத்தை அவருக்கு யார் வழங்கியது என்றும் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் கேள்வி எழுப்பினார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...