ஜனாதிபதியை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் சபாநாயகர் செயற்பாடு | தினகரன்

ஜனாதிபதியை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் சபாநாயகர் செயற்பாடு

சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தையும் தொடர்ச்சியாக மீறி வருவதுடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எல்.ரி.ரி.ஈ ஆதரவு புலம்பெயர்வாழ் தரப்பினரின் தேவைகளுக்கு ஏற்ற வகையிலும் அவர் நடந்து கொள்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இன்றையதினம் பாராளுமன்றத்தில் ஏதாவது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, ஷெஹான் சேமசிங்க, காஞ்சன வீரசேகர மற்றும் ஜோன் செனவிரட்ண ஆகியோரே இந்த விடயங்களைத் தெரிவித்தனர்.

அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் சபாநாயகர் நடந்து கொள்வதாகவும், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லையென்றும் குற்றஞ்சாட்டினர். தமது அரசியல் வாழ்க்கையில் தற்போதைய சபாநாயகர் போன்று எந்தவொரு சபாநாயகரும் நடந்துகொள்ளவில்லையென்றும், காலாவதியான மருந்தைப் பயன்படுத்திய யானையை போன்று சபாநாயகர் பாராளுமன்றத்தில் செயற்பட்டதாகவும் கூறினர்.

சபாநாயகர் கடந்த மூன்று வருடங்களாக ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு வருகிறார். ரவி கருணாநாயக்க அல்லது ராஜித சேனாரட்ன ஆகியோருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை விவாதத்துக்கு எடுப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டாத சபாநாயகர் தற்பொழுது அரசியலமைப்பை மீறி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முயற்சிக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இடது பக்க காதில் கேள்திறன் குறைபாட்டைக் கொண்டிருந்த சபாநாயகருக்கு தற்பொழுது வலதுபக்க காதில் கேள்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றார்.

குரல் வாக்கெடுப்பை நடத்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவது சட்டரீதியாக ஏற்புடையதல்ல. சபாநாயகர் உரிய முறையை கடைப்பிடித்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு உரிய பெரும்பான்மை இல்லை என்பதை உணர முடியும். நடுநிலையாகவிருக்கவேண்டிய சபாநாயகர் சிறிகொத்த அரசியலமைப்பின்படி நடந்துகொள்கிறார் என்றும் குற்றஞ்சுமத்தினார்.


Add new comment

Or log in with...